மீட்பில் இருக்கும் முழுமையான மகிழ்ச்சி Louisville, Kentucky, USA 54-0330 1இந்த இரவுப்பொழுதில் உயிர்த்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அருமையான நாமத்தில் மறுபடியுமாக உங்களை வாழ்த்தி வரவேற்பதில் சந்தோஷப்படுகிறேன். மேலும் நான் இங்கே உள்ளே வரும் முன்னரே அவருடைய பிரசன்னம் இருக்கிறது. அதனால் இந்த இரவுப்பொழுதில் நாம் நினைப்பதற்கும் நம்மால் இயன்றதற்கும் மேலான காரியங்களை மிகவும் அதிகமாக நாம் எதிர்பார்க்கிறோம். தேவன் அவருடைய ஆசீர்வாதங்களை நம் மீது ஊற்றி இயேசு கிறிஸ்துவை நம் மத்தியில் மகிமைப்படுத்துவாராக. நான் கடந்த இரண்டு இரவுகளாக பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். ஞாயிறு இரவில் சுகமளிக்கும் கூட்டத்தை பெற்றிருந்தோம் என்று நினைக்கிறேன் மற்றும் திங்கள் இரவிலே நான் பிரசங்கம் செய்திருந்தேன். ஞாயிறு காலையிலே நான் சபை கூடாரத்தில் ஒரு பொருளை பற்றி பிரசங்கிக்க ஆரம்பித்தேன். கூட்டம் கொஞ்சம் ஆவிக்குரிய ரீதியில் எழும்புவதற்காக காத்திருக்கும் அந்த சமயத்தில் என்னுடைய உணர்வுகளைக் கொஞ்சம் கொட்டிவிடலாம் என்று நான் நினைத்தேன். தேவனுக்குச் சித்தமாக இருந்தால், மற்றும் எனக்கு உதவி செய்வாரென்றால் இந்த நாட்களின் ஒன்றில் அநேகத் தொடர் கூட்டங்களை நடத்த விரும்புகிறேன். அதில் வார்த்தையை பிரசங்கித்தோ அல்லது போதித்தோ பலிபீட அழைப்பைவிடுத்து, பலிபீடத்தண்டையில் மக்களுக்காக ஜெபிக்க வேண்டும். பண்டைய காலத்து பாப்டிஸ்ட்டுகளாகிய நாம் எப்படி செய்தோமோ அது போலச் செய்ய விரும்புகிறேன். (யாரோ “ஆமென்” என்கின்றனர்). இரண்டு பாப்டிஸ்டுகள் மட்டும் ஆமென் சொன்னதைக் கேட்டேன். இந்த இரவுப்பொழுதில் நீங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறீர்களா? யாரோ ஒருவர், சகோதரர் பிரான்ஹாம் நீங்கள் ஒரு பாப்டிஸ்ட்டாக இருந்தீர்களா?“ என்றார். “ஆம்” என்று நான் பதிலளித்தேன். 2ஒருமுறை இங்கு அர்கன்சாவில் நான் பிரசங்கித்தபோது வயதான ஒரு நபர் சுகமடைந்தார். அவர் ஒரு நசரேயன். மறுநாளே அவர் அவருடைய கக்கத் தண்டங்களை (crutches) முதுகில் வைத்தவாறு “கடந்த இரவு தேவன் இதிலிருந்து என்னை விடுவித்தார்”, என்று எழுதப்பட்ட பலகையை அதன் மேல் வைத்தப்படி நகரம் முழுவதும் சுற்றி வந்தார். அவரோ அதற்கு முன் மிகவும் மோசமான முடவனாயிருந்தார். இந்த சம்பவம் லிட்டில் ராக் என்ற இடத்தில் நடைப்பெற்றிருந்தது. அவர் அங்கே தொப்பியில் பென்சில்களை வைத்தப்படி விற்று வந்திருந்தப்படியால் எல்லோருக்கும் அவர் அநேக வருடங்களாக அந்த நிலையில் இருந்தது தெரியும். இந்த காரியம் அந்தப் பட்டணத்தில் ஒரு பெரிய விஷயமாக பேசப்பட்டது. அதன் பிறகு இரண்டு இரவுகள் கழித்து நான் பிரசங்கித்தபோது அவர் எழும்பி நின்று, “ஒரு நிமிடம் சகோதரர் பிரான்ஹாம், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் ஒன்று கேட்கலாமா?” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்கு ஆட்சேபனை இல்லை ஐயா”, என்று சொன்னேன். பிறகு அவர், “நல்லது, நீங்கள் பிரசங்கித்ததைக் கேட்டபோது நீங்கள் ஒரு நசரேயன் என்று நான் நினைத்தேன். ஆனால் இங்கு சுற்றிலும் பெந்தெகொஸ்தே மக்கள் இருப்பதை பார்த்தேன். அதில் ஒருவர் நீங்கள் பெந்தெகொஸ்தேயினர் என்று சொன்னார். அதன்பிறகு நீங்களோ சற்று நேரத்திற்கு முன் உங்களை ஒரு பாப்டிஸ்ட் என்று சொல்வதைக் கேட்டேன். என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். அதற்கு நான், “பாருங்கள், அது மிகவும் சாதாரன காரியம். நான் ஒரு பெந்தெகொஸ்தே நசரேய பாப்டிஸ்ட்” என்றேன். அதுசரி தான். நாம்... விசுவாசிக்கிறோம். 3ஓ, நண்பர்களே நான் எந்த ஒரு சபை ஸ்தாபனத்தையும் சேர்ந்தவனல்ல, ஆனாலும் ஒவ்வொன்றிலும் இருக்கிறேன். இதைப் பற்றி நான் துவங்கியபொழுது, “கிறிஸ்துவே என் தலையாக இருக்கிறார். இந்த வேதாகமம் என்னுடைய பாடப்புத்தகம். மற்றும் இந்த உலகம் என்னுடைய சபை”, என்று சொன்னேன். ஆகவே நான் மரிக்கும்வரை அப்படியே இருக்கவே விரும்புகிறேன். 4இப்பொழுது ஓரிரு தினங்களில் மறுபடியுமாக நாம் சுகமளிக்கும் கூட்டத்தைத் துவங்கலாம். நிச்சயமாகவே இங்கு தொடர்ந்து இந்த படுக்கைகளையும் தூக்கு படுக்கைகளையும் பார்க்கும் போது ஏதோ ஒரு காரியம் நடைப்பெற்றிடவே விரும்புகிறேன். ஏதோ ஒரு காரியம் இந்த கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் நடைபெற வேண்டுமென்று எனக்கு ஆவலாக இருக்கிறது. ஏனென்றால் இது என்னுடைய சொந்த மாநிலம். இதுவரைக்கும் ஒரு நல்ல, அதாவது அருமையான கூட்டம் என்று சொல்வீர்கள் அல்லவா, அது போன்ற ஒன்று கென்டக்கியில் நடைபெறவில்லை. இப்பொழுது நான் அதைத் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. எனக்கு அநேக இடத்தில் மோசமான கூட்டங்கள் இருந்ததுண்டு ஆனால் என் சொந்த ஊரிலேயே அப்படி இருப்பது எனக்கு கடினமாக இருக்கிறது. இப்படி இதை சொல்வதும் எனக்கு சுலபமான காரியம் அல்ல. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, எனினும் இயேசு, “உம்முடைய சொந்த தேசத்தில்” எப்படி இருக்கும் என்று சொன்னாரோ அது அப்படித் தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். அதுபோலவே நம்மிடையே அதிகமான மிகச்சிறந்த அற்புதங்களை நாம் காணவில்லையே. ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பதாக நான் இங்கு ஜெபர்சன்வில்லில் ஒரு கூட்டம் நடத்தினேன். அதிலே ஒரு பெண் இதே கென்டக்கியிலுள்ள ஏதோ ஒரு இடத்தில்இருந்து வந்திருந்தார். அவள் இடுப்பில் இருந்து கால்வரை தடியெலும்பு மெலிவு ஏற்பட்டிருந்தபடியால் அவர்கள் நடந்து பதினேழு வருடம் ஆகியிருந்தது. உங்களில் அநேகர் அங்கே அந்த இரவில் இருந்தீர்கள். ஆகையால் அந்த நிகழ்வு உங்களுக்கு நினைவில் இருக்கும். அந்தப் பெண் சரியாக அங்கேயே எழும்பி அந்தக் கூடாரத்தை விட்டு சாதாரணமாக நடந்து சென்றாள். 5இப்பொழுது இங்கு லூயிவில்லில் ஒரு காரியம் துவங்கி பண்டையகால எழுப்புதல் போல இந்த அருமையான பெரிய பட்டணம் முழுவதையும் துப்புரவாக்குவதைக் காண விரும்புகிறேன். எல்லாப் பட்டணத்தைப் போலதான் இந்த பட்டணமும் இருக்கிறது. எல்லா இடங்களைப் போல் இந்த இடமும் பொல்லாங்கானதாய் இருக்கிறது. அது உண்மை என்பது உங்களுக்கும் தெரியும். இப்பொழுது நான் கென்டக்கியை புண்படுத்தவில்லை, ஏனென்றால் நானும் கூட ஒரு கென்டக்கியன்தான். இருந்தாலும் அது தான் உண்மை. அது பொல்லாங்கான இடமாக இருக்கிறது. இங்கே விஸ்க்கிகள் மற்றும் எல்லா மதுபான தொழில்சாலைகளுக்கும் மற்றும் பொல்லாத கருவிகளுக்கும் இந்த இடம்தான் தாய்வீடாக இருக்கிறது. சரியாக லூயிவில், கென்டக்கியை சுற்றிலும் நடக்கின்றபடியால் இந்த இடம்தான் சாத்தானின் இருக்கையாகவே இருக்கிறது. ஆனாலும் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால், இவற்றையெல்லாம் சுக்கு நூறாக உடைத்துப் போடமுடியும். அது சரி தான். நாம் நம்முடைய வல்லமைகளை ஒன்றிணைத்து அதை வெளியே தள்ள வேண்டும். 6கொஞ்சக்காலம் முன் இந்த தேசத்தில் பிரபலமான ஒரு சுவிசேஷகர் தன்னுடைய கூட்டங்களை பற்றி இங்கு பேசியிருந்தார். அதில் அவர், “சரி, காரியம் என்னவென்றால், நான் ஒரு பட்டணத்துக்கு போகும்பொழுது அந்த தேசத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து அந்த கூடுகையை தாங்க வேண்டும் இல்லையென்றால் நான் அங்கு போகமாட்டேன்” என்றார். அது சரியே. நல்லது, சற்று அதைப்பற்றி யோசித்து பாருங்கள். இங்கே லூயிவில்லில் மட்டும் கிட்டத்தட்ட அறுபது அல்லது எழுபது பெரிய பாப்டிஸ்ட் சபைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். புரிகிறதா? மெத்தடிஸ்ட் எத்தனை இருக்கிறது?இதுவோ மெத்தடிஸ்டின் நகரம். ஆஸ்பரி இங்குதான் இருக்கிறது. அந்த மனிதன் இந்த நகரத்திற்கு வருவாரென்றால் அவருக்கு என்னதான் கிடைக்கும். வெறும் மெத்தடிஸ்டும் பாப்டிஸ்டுகள் மட்டும் இருக்கிறார்கள். பிரஸ்பிடேரியன்கள் மற்றும் மீதமுள்ளவர்களை விட்டுவிடுங்கள். இப்பொழுது முழுசுவிசேஷ சபைகள் இந்த பட்டணத்தில் எத்தனை இருக்கிறது? இரண்டு அல்லது மூன்று சிறு சபைகள் ஆங்காங்கே இருக்கிறது. மேலும் இவர்களோ ஒருவரோடு ஒருவர் யுத்தத்தில் இருக்கிறார்கள். 7எனவே தான் இங்கே வரும்பொழுது நீங்கள் உங்களுடைய ஊழியத்தின் பெலத்திலேயே நிற்கவேண்டும். அது சரி தான். எல்லோரும் இதை ஒரு அரசியல் போல் நடத்துகிறார்கள். நீங்கள் உங்கள் ஊழியத்தின் வல்லமையிலே நின்றிட வேண்டும். தேவன் என்ன உங்களுக்கு அருளுகிறாரோ அதிலிருந்தே இழுத்துக் கொள்ளுங்கள். சகோதரனே, இயேசு கிறிஸ்து மட்டும் என்னுடைய தஞ்சமும் என் நம்பிக்கையுமாக இல்லையென்றால் எனக்கு வேறு தாபரம் கிடையாது. அது சரியே. அந்த நிலையான கன்மலையான கிறிஸ்துவின் மேலேயே நான் நிற்கிறேன் மற்ற எல்லாமுமே புதைமணல் என்றே நினைக்கிறேன். அரசியல் செய்து இழுக்கப்பட்ட பத்தாயிரம் பேர்களுக்குப் பிரசங்கிப்பதைக் காட்டிலும் செய்தியைக் கேட்கும்படி தேவன் அனுப்பின ஐந்து பேருக்கே பிரசங்கிக்க விரும்புகிறேன். “சரி, நான் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று சொல்லும் பத்தாயிரம் பேரை காண்பதைக் காட்டிலும் பண்டையகால பாணியிலான அழுகையோடும் புலம்பலோடும் மனம்மாறும் ஒருவரையே காண விரும்புகிறேன். முயற்சி செய்கிறேனா? கிறிஸ்து ஒன்றும் முயற்சி செய்து பார்பதற்காக அல்ல. ஜீவித்தாலும் மரித்தாலும் அல்லது மூழ்கினாலும், மூழ்கடிக்கப்பட்டாலும் சரி, எப்படியிருந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் சரி. 8இன்று இரவு நான் ஒரு பத்தாயிரம் பேர்களுக்கு ஜெபித்து அவர்கள் எல்லோரும் நாளை காலையிலேயே மரித்தாலும், நாளை இரவே மறுபடியும் தேவனுடைய வார்த்தையே சரியானது என்று விசுவாசித்து நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். அது சரிதான். நான் மரிக்கும் தருவாயில் இருக்கும்பொழுதும் மரித்த ஐந்தாயிரம் பேர்கள் நூறு ஆண்டுகளாக நித்தியத்தில் இருந்து பிறகு உயிர்த்தெழுந்து பூமிக்கு வந்து, “சகோதரர் பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் அதை நம்பாதீர்கள்; அவர் சொன்னது உண்மை இல்லை. அதை நீங்கள் நம்பாதீர்கள். நாங்கள் அவரை நம்பி ஏமாந்தோம்” என்று சொல்லட்டும். அப்படியிருந்தும், “இயேசு கிறிஸ்துவுக்குள்ளேயே நான் மரிக்கட்டும்” என்றே சொல்லுவேன். அது சரிதான். அதை நான் விசுவாசிக்கிறேன். அதுவே என்னுடைய முழு வாஞ்சை, மற்ற எல்லாம் அதை சார்ந்தே இருக்கிறது. மேலும் என் முழு இருதயத்தோடும் அதையே நான் விசுவாசித்து அவரையே நான் சார்ந்திருக்கிறேன். மேலும் அவருடைய ஜனத்தை நான் நேசிக்கிறேன். தேவ ராஜ்யத்தின் சக குடிமக்களாகிய உங்களை நான் நேசிக்கிறேன். உங்களோடு தோள் கொடுக்கவும் சேர்ந்து பாரத்தைச் சுமக்கவுமே விரும்புகிறேன். 9இப்பொழுது இன்றிரவு... நான் கடந்த இரவிலே தேவனுக்குச் சித்தமாய் இருந்தால் இன்று நான் சிறிது நேரம் பேசுவேன் என கூறியிருந்தேன். அதிக நேரம் உங்களை உட்கார வைத்து களைப்படைய செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நாம் எதிர்பார்ப்புடன்... நான் இந்த கூட்டத்திற்காக தேவனுக்கு முன்பாக ஒரு பூச்சியை போல ஒட்டிக் கொண்டிருந்தேன். தேவன் தாம் ஏதேனும் காரியத்தை செய்து இந்த பட்டணத்தில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நிகழ செய்ய வேண்டும். நீங்கள் ஜெபியுங்கள், அது உங்கள் பாகம். அப்பொழுதுதான் நியாயத்தீர்ப்பானது வரும்போது, நாமெல்லாரும் நின்று நாங்கள் எங்கள் பாகத்தைச் செய்தோம் என்று சொல்லலாம். யாத்திராகமம் 20-ம் அதிகாரத்தில் 7-வது வசனத்தில் துவங்கலாம். தேவன் என்னை அனுமதிப்பாரென்றால் நான் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறேன், ஒரு முக்கிய... மிகச் சிறந்த பொருள் என்று சொல்ல முடியாது ஆனால் நல்ல பொருள் என்று சொல்லலாம். கடந்த ஞாயிற்று கிழமையில் ஜெபர்சன்வில் கூடாரத்தின் ஞாயிறு பள்ளியில் “இரத்தத்தின் மூலமாக மீட்பு” என்ற தலைப்பில் துவங்கினோம். 10நான் இதை ஏன் இங்கு செய்கிறேன் என்று நீங்கள் அறியவேண்டும் என்றால் இதோ இது தான் காரியம். சுகமளிக்கும் கூட்டத்தில் நான் பிரசங்கிப்பதை பார்த்ததில்லை என்று உங்களில் அநேகர் கூறியிருக்கிறீர்கள், ஏனென்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. ஆத்துமாக்களை மனந்திரும்பச் செய்து பலிபீடத்திற்குக் கொண்டு வந்து, மக்கள் உண்மையாக தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி ஜெபிப்பார்கள் என்றால், அப்பொழுது லூயிவில்லுக்காக தேவனுடைய கண்களில் தயவு பெற்றுக் கொள்ளுவேன். மேலும் இங்கு இருக்கும் அநேக நண்பர்கள் உபவாசித்து ஜெபிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஜெபிக்கிறதான காரியங்களைப் பிடித்து கொள்ள பயப்படுகிறீர்கள். அது சரிதான். புரிகிறதா? உபவாசத்தோடும் ஜெபத்தோடும் இருந்தாலும் அதனோடு கிரியைகள் இல்லையென்றால் அது ஒரு பலனும் தராது. நீங்கள் வெளியே சென்று அதனோடு நேருக்கு நேர் நின்று போராடி பெற்றுக் கொள்ளவில்லை என்றால் உங்கள் விசுவாசம் எல்லாம் இந்த உலகத்தில் எந்த பலனையும் அளிக்காது. அவ்வளவுதான்; நீங்கள் முன்னேறிதான் செல்ல வேண்டும். எப்படியானாலும் நீங்கள் முன்சென்று அதைசெய்ய வேண்டும். நீங்கள் ஒன்றைக் கேட்பீர்கள் என்றால், அதை சென்று பெற்று கொள்ளுங்கள். தேவன் அது உங்களுடையது என்று சொன்னார், ஆகையால் அதற்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் எதைக் கோரினீர்களோ அதையே பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதை செய்யும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆமாம். பின்னிடரடைந்தவராய், “சரி, நான் இரண்டாம் பட்சத்தையே ஏற்றுக் கொள்கிறேன்” என்று ஒருப்போதும் சொல்ல வேண்டாம். 11நான் முதலானதையே எடுத்துக் கொள்ளுவேன். தேவன் எனக்கு முதன்மையானதையே வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். எனக்கும் அதுதான் வேண்டும். மேலும் இந்த இருபத்திமூன்று வருடமாக நான் அவருக்கு ஊழியம் செய்கிறேன். அவர் எனக்கு அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். அவரை நான் எவ்வளவாய் விசுவாசிக்கிறேனோ மற்றும் நேசிக்கிறேனோ, அவ்விதமாகவே அவரும் என்னை நேசிக்கிறார். அது அவ்வாறாகவேதான் இருக்கும் ஏனென்றால் அவருடைய வார்த்தைக்கு அவர் கட்டுப்பட்டவராக இருக்கிறார். “நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளை வாஞ்சிப்பீர்களோ அவைகளைப் பெற்று கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என்றார். அவர் அப்படிதான் சொன்னார். அது சரி தானே? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்). சரி. அது நல்லது. இப்பொழுது, நீங்கள் ''ஆமென்“ என்று சொல்லுவதைக் கேட்க விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியுமா, சகோதரி ஹவர், 'ஆமென்' என்றால், ''அப்படியே ஆகட்டும்” என்று அர்த்தம். மேலும் நான் பேசும் போது யாரும் ''ஆமென்“ சொல்லவே இல்லையென்றால் நான் குழம்பிப் போகிறேன். 12இங்கே சில காலத்திற்கு முன் ஒரு சிறிய சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், மேலும் நான் வெறுமனே... ஓ, எனக்கு அதிகமாக இந்த நாளின் பிரசங்க பீட முறைகள் பற்றி தெரியாது. அதன்படி நான் சற்று ஒழுக்கக் குறைவாகவே நடந்துக் கொண்டேன் என்றே நினைக்கிறன். அங்கே நான் பிரசங்கபீடத்தின் மேல் குதித்து, மைக்கைப் பிடித்துக் கொண்டு, என் கால்களை கீழே தொங்கவிட்டவாறு கடுமையாகப் பிரசங்கித்தேன். பிறகு என் நிலைக்கு நான் வந்தபொழுது நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மீண்டும் சில நொடிகளில் மறுபடியுமாக என் நிலையை இழந்தேன். சுயநினைவு திரும்பியபோது, சபையின் மத்தியில் இருக்கும் நடைபாதையில் என் பேண்ட்டை கால் பாகம் மேலாகச் சுருட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மையில் நான்... அந்த நிலை இன்னும் சற்று நேரம் இருந்திருந்தாலும் நலமாயிருந்திருக்கும். நான் நிச்சயமாக அதை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்வின் தாக்கம் எனக்கு பல நாட்களாக இருந்தது. ஒரு மனிதன் என்னிடம்வந்து, “அந்த மக்கள் எல்லாரும் 'ஆமென்' என்று சொல்லும்போது உங்களால் எப்படி பிரசங்கிக்க முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு நான், “அதுதான் என்னைப் பிரசங்கிக்கவே வைக்கிறது”, என்று சொன்னேன். 13என்னிடத்தில் ஒரு வயதான நாய் இருந்தது. ராக்கூன் என்னும் பாலூட்டி வகை மிருகத்தை நான் வேட்டையாடுவது வழக்கம். என்னுடைய அநேக கென்டக்கி நண்பர்கள் அந்த மிருகத்தை வேட்டையாட விரும்புகிறவர்கள். மேலும் ஸ்கன்க் என்ற விலங்கைத் தவிர அந்த பாலூட்டிமிருகம் எந்த மரத்திலோ அல்லது எங்கு இருந்தாலும் அதைப் பிடித்துவிடும். அந்த ஸ்கன்க்கின் பக்கமே போகாது. ஆனால் அதை ஒரு அடர்ந்த புதருக்குள் துரத்திவிடும். ஆகவே நான் செய்ய வேண்டியது எல்லாம் அந்த புதரை தூக்கிப்பிடித்து அவனைத் தட்டிக் கொடுத்து பிடி பிடி என்று உரக்க கத்தினால் போதும், அது அந்த ஸ்கன்க்கைப் பிடிக்கும். இப்பொழுது எனக்குத் தெரிந்த மோசமான ஸ்கன்க் யார் என்றால் அது அந்த பிசாசுதான். மற்றும் சில சமயம் நீங்கள் கொஞ்சம் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால் உரக்க “ஆமென்” என்று சொல்லுங்கள். நாம் அவனை நசுக்கி பிறகு அவனை சிறை பிடிப்போம். புரிகிறதா? 14உங்களுக்கு அந்த வயதானவர் பட்டி ராபின்சன் அவர்களைத் தெரியுமா? அநேகர் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் நசரேய சபையைச் சேர்ந்தவர். அவர், ''ஆண்டவரே, உருளையான மரக்கட்டை போன்று வலிமையான முதுகு எலும்பை எனக்கு தாரும். அதிகமான ஞானத்தை என் ஆத்துமா ஆழத்துக்குள் தாரும். என் வாயில் இருக்கும் எல்லா பற்களும் விழுந்து மீதம் ஒரு பல் மிச்சமிருக்கும் நேரம் மட்டுமாக நான் சாத்தானுடன் போராடட்டும். நான் சாகும் மட்டுமாக அவனை மென்று போடட்டும்“. அது ஒரு மிக அருமையான... மற்றும் அவரும் அப்படியாகவே செய்தார். அதைதான் செய்தார். கிட்டத்தட்ட நூறு வயது ஆகிறது. இன்னுமாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். வயதான வீரர்கள் அவ்விதமாகப் பிரசங்கிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அன்று ஒரு நாள் நான் யதார்த்தமாக வானொலியை திருப்பியபோது கிட்டதட்ட நூறு வயதுடைய மொர்தெக்காய் எப். ஹாம் என்ற ஒரு வயதான சகோதரர், இன்னுமாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். ''தேவனே, அவரை ஆசீர்வதியும். அவர் அங்கு வரும்போது அவருடைய கிரீடத்தில் நட்சத்திரங்களை பெற்றிருப்பாராக“, என்று நான் சொன்னேன். சகோதரர் ஹாம்மை அவ்வளவாக நான் அறியேன். இவ்வுலகத்தை விட்டு அவர் கடந்து போகும் முன் இன்றொரு நாட்களில் அவரை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு வயதான வீரராக இருக்கிறபடியால் அங்கே கடந்து செல்லும் போது அநேகப் பேருடன் கை குலுக்குவார் என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் இப்பொழுது நாம் வார்த்தைக்குள் போகும் முன் அதன் ஆக்கியோனை இறங்கி வந்து அதை நமக்கு வெளிப்படுத்தும்படியாக நாம் கேட்போம். 15எங்கள் அன்பான பரலோகப் பிதாவே இந்த இரவுப் பொழுதில் உம்முடைய குமாரனாம் இயேசுவின் அழகும் அற்புதமான நாமத்தில் உம்மிடத்தில் வந்து எங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறோம். அவருடைய பரிசுத்த நாமத்தை உச்சரிக்கவும் நாங்கள் தகுதியற்றவர்களாயிருக்கிறோம். பரலோகத்தில் இருக்கிற எல்லா குடும்பத்திற்கும் ''இயேசு“ என்ற நாமம் தரிப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாவியாயிருந்தாலும் பரிசுத்தவான்களாயிருந்தாலும் அந்த நாமத்தின் முன்பாகவே எல்லா முழங்கால்களும் முடங்கிடும், அதனிடமே எல்லா நாவும் அறிக்கையிடும். அப்படியானால் அவர் நாமத்தினாலே நாம் பேசும்போது நம் இருதயம் எவ்வாறு நடுங்கி பயபக்தியுடனும், மரியாதையோடும் இருக்கவேண்டும். ஆகவே கர்த்தாவே நீர் இந்த இரவுப்பொழுதில் எங்கள் மத்தியில் வரும்படியாக அவருடைய நாமத்தில் மிகவும் பயபக்தியுடன் கேட்கிறோம். நாங்கள் ஒரு பெரிய மகத்தான பட்டணத்தின் மத்தியில் இருக்கிறோம். தன்னுடைய விதவிதமான கருவிகளான சூதாட்டம், விபச்சாரம், விஸ்கி மற்றும் சிகரெட்டுகள் போன்ற தொழில்களை கொண்டு மக்களை அவ்வளவாக கட்டி வைத்திருக்கிறான். ஆனாலும் தேவனே, பிரசங்கபீடத்தில் நிற்கும் அநேக பிரசங்கிமார்கள் இவற்றையெல்லாம் சாதாரணமான விஷயங்கள் என்பதை போல கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். எனினும் தேவரீர் சுவிசேஷத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் பிரசங்கிக்க எங்களுக்கு அந்த எச்சரிப்பின் சத்தத்தைத் தாரும். கோடாரியை ஒவ்வொரு மரத்தின் வேர்களின் அடியிலும் வைப்பீராக. பட்டுப் போனவைகளெல்லாம் விழுந்துபோகட்டும். இப்போதும் தேவரீர் இதுபோன்ற காரியங்களின் மேலாக நியாயத்தீர்ப்பை அறிவிக்க உதவி செய்யும். உம்முடைய பிரியமுள்ள குமாரன் இயேசுவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். 16தேவரீர், ஏதோவொரு காரியத்தை செய்து தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக இந்தப் பட்டணத்தை உலுக்கும். தேவனே, சிறு எண்ணிக்கை கொண்ட சபைகளைக் கூட அருமையான பண்டையக்கால முறையில் மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களால் நிரம்பும்படி செய்யும். அதை அருளும் கர்த்தாவே. மேலும் ஒரு பண்டையகாலத்து எழுப்புதலை நாங்கள் பெற்றுக் கொள்ளட்டும். தேவன் அனுப்பும் அந்த எழுப்புதல், பட்டணத்தை ஒருமுனை துவங்கி மறுமுனை மட்டுமாக உலுக்கி, இழிவானவைகளையெல்லாம் விரட்டியடிக்கட்டும். தேவரீர் நீண்ட நேரம் கொண்ட கூட்டத்தை நாங்கள் பெற்றிருப்பதை காட்டிலும் கள்ளச் சாராயத்தையும் மற்றும் எல்லா காரியத்தையும் ஒழிக்கும் எழுப்புதல் உள்ள கூட்டத்தை தாரும். அது சபையின் மணிஓசையை கேட்டவுடன் சபைக்கு சென்று மேய்ப்பர் செய்தி கொண்டு வருவதற்கு முன்பதாகவே அந்த பலிப்பீடத்தண்டை ஓடிச்சென்று ஜெபித்து தன்னை தயார் செய்யும் நிலையை ஏற்படுத்தட்டும். இதை நிச்சயமாய் அருளும் ஆண்டவரே. பிதாவே, இந்த இரவுப்பொழுதில் இங்கே வியாதியஸ்தர்கள் இருக்கக்கூடும். மேலும் வியாதிகளைக் குறித்தோ அல்லது வியாதியஸ்தர்களுக்கோ பேசும் போதே பரிசுத்தாவியானவர் இந்த கட்டிடத்தில் இருக்கும் எல்லா வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்துவாராக. ஒவ்வொரு பாவியையும் இரட்சியும், பின்மாற்றம் அடைந்த மக்களையும் அவர்கள் தங்கள் வழியைவிட்டு வீட்டிற்கு வரும்படியாக அவர்களை அழைப்பீராக. இப்பொழுது இந்த இரவில் இந்த பொருளுக்குள்ளாக என்னை வழிநடுத்தினவர் பரிசுத்தாவியானவர். இப்பொழுது அவரே தேவனுக்குண்டான காரியங்களை எடுத்து அவர் மகிமையடையும்படி இங்கிருக்கும் அவருடைய ஊழியக்காரனை ஒரு கருவியாக உபயோகிக்கட்டும். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 17எண்ணாகமம், 20-ஆம் அதிகாரத்தின் 7-ஆம் வசனத்தில் நாம் இதை வாசிக்கிறோம்: கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்கு முன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுதுஅது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; (ஆங்கிலத்தில் ''தன்னுடைய தண்ணீர்“ என்று குறிக்கப் பட்டிருக்கிறது) இதை நன்றாக கவனிக்கும்படி விரும்புகிறேன், அது ''அவருடைய” தண்ணீரைக் கொண்டு வரும்... இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச் செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப் பண்ணுவோமா என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது. சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தன. இப்பொழுது தேவனுக்குச் சித்தமானால் நேற்றைய இரவின் பொருளுக்கு நாம் திரும்பவும் சென்று இதனோடு இணைக்கும்படியாக கர்த்தர் இந்த சிறு வார்த்தைகளை உபயோகப்படுத்துவாராக. 18மேலும் இங்கு இருக்கும் எல்லா வியாதியஸ்தர்களும் இவ்விரவுப்பொழுதில்... பில்லி இன்றைக்கு ஜெப அட்டையைக் கொடுக்கவில்லை ஏனென்றால் நான் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். நான், பில்லியிடம், ''நீ சகோதரர் காபிலிடத்தில் சென்று சொல்...“ நான் தேவனுடைய மகிமைக்காக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். அவரிடத்தில் தேவனுடைய ராஜ்யத்திற்காக ஆத்துமாக்களை சேர்ப்பதற்காகவும், தங்கள் விசுவாசத்தை உறுதி செய்து முன்னேறி சென்று ஏதுமில்லாத நிலையிலும், ''தேவரீர், உம்முடைய வார்த்தையின்படி உம்மை விசுவாசிக்கிறேன்“ என்று சொல்லத் தக்கதான விசுவாசிகளையும் தாரும். அதுவே ஆரம்பம். அதுவே முதலாவதும் சிறந்ததுமான முறை. அதுதான் உண்மை. தேவனை அவருடைய வார்த்தையின்படி நம்புங்கள். அப்படி உங்களால் முடியவில்லையென்றால் அப்பொழுது அவர் வரங்கள் மற்றும் அடையாளங்கள் போன்றவற்றை கொண்டு தன்னுடைய வார்த்தையை கொண்டு ஒவ்வொரு விசுவாசிக்கும் நிரூபிப்பார். இப்பொழுது, ஞாயிற்றுக்கிழமையிலே நாம், ''இரத்தத்தினால் மீட்பு” என்ற காரியத்தைப் பார்த்தோம். 19நாம் இப்பொழுது எகிப்திலிருந்து வெளியே வந்து வாக்குத்தத்த பூமியாகிய பாலஸ்தீன தேசத்திற்க்கு செல்லும் இஸ்ரவேலரை குறித்து பார்க்க போகிறோம். எகிப்து உலகத்திற்கு அடையாளமாக இருக்கிறது. அது ஒரு அழகான காட்சியாக இருக்கிறது. அதை நான் அவ்வளவாக நேசிக்கிறேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் நான் அமர்ந்து யாத்திராகமம் புத்தகத்தை முழுவதுமாகவோ அல்லது என்னால் முடிந்தவரையுமோ வாசிக்கிறேன். அதை நான் மிகவும் நேசிக்கிறேன் ஏனென்றால் அது இன்றைக்கு இருக்கும் சபையின் நிலைமையையும் தேவன் எவ்வாறாக அசைவாடுகிறார் என்பதையும் குறிக்கும் தத்துரூபமான மாதிரியாக இருக்கிறது. அவர் இயற்கையில் எவ்வாறாக அசைவாடினாரோ அதே பிரகாரமாக இப்பொழுது ஆவியில் அசைவாடுகிறார். புரிகிறதா? அப்பொழுது அங்கே இயற்கை ரீதியில் இஸ்ரவேலை வழிநடத்தினார். அங்கே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இயற்கையான இடத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றதை அவர்கள் கண்டார்கள். இப்பொழுது நாம் இங்கே பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறோம். நாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பூமிக்கு செல்லும் பயணத்தில் இருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் அதற்கு ''ஆமென்“ என்கின்றனர்) ''என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்”. அது உண்மைதானே? இப்பொழுதும் நாம் போவதற்கு ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமி உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து செல்கின்றோம். 20மரணம் என்கின்ற மிகப் பெரிய இருளான நிழல் நமக்கு முன்னால் இருக்கிறது. மற்றும் ஒவ்வொருமுறை நம்முடைய இருதயம் துடிக்கும்போதும் நாம் ஒரு அடி அதற்கு அருகே செல்கிறோம். இன்றொரு நாட்களில் அது கடைசியாக ஒருமுறை துடிக்கும், அப்பொழுது நாம் உள்ளே செல்வோம். நான் என்னுடைய நேரத்தில் சரியாகச் செல்ல விரும்புகிறேன். மேலும் இந்த இரவுப்பொழுதில் எல்லோரும் அவ்வாறு தான் விரும்புகிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு முன்னால் அது இருக்கிறது என்று நான் அறிந்து, அதை சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிலைமை ஏற்படும்போது, நான் ஒரு கோழையாக இருக்க விரும்பவில்லை. அவருடைய நீதியின் சால்வையால் என்னை உடுத்திக் கொண்டு அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைக் குறித்து நான் உறுதியாய் அறிந்தவனாக, மரித்தோர்களிலிருந்து அவர் அழைக்கும்போது ஜீவிக்கிறவர்கள் மத்தியில் நான் அழைக்கப்படுவேன் என்ற உறுதியோடு அதனூடாகச் செல்ல விரும்புகிறேன். தேவன் ஜீவிக்கிறவர்களின் தேவனாக இருக்கிறார். 21அங்கே அவர்கள் அந்த தேசத்திற்கு அவர்கள் பிரயாணப்பட்டு சென்றபோது தேவன் அவர்களுக்கு ஒரு திட்டம் வைத்திருந்ததை நாம் காண்கிறோம். அவர்தாமே இரத்தத்தை கொண்டு மீட்பைக் கொண்டு வந்தார். பிறகு மறுபடியுமாக மீட்பை வல்லமையினால் கொண்டு வந்தார் என்பதை காண்கிறோம். முந்தின இரவில் அவர் இரத்தத்தைப் பூசினார் என்று நாம் பார்த்தோம். அது ஒரு விசுவாசிக்கு அழகான ஒப்பனையாக இருக்கிறது. அவனுக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து மரித்தார் என்று அவன் ஏற்றுக் கொள்ளும்போது, அவன் தேவனின் பிள்ளையாக மாறுகிறான். அவன் அவனுடைய பிரயாணத்தைத் துவங்குகிறான். இப்பொழுது அடுத்த காரியமாக அவன் இரட்சிக்கப்பட்ட பிறகு அவன் பெற்றிருக்க வேண்டிய ஆவிக்குரிய காரியங்களை... இப்பொழுது குற்றமற்ற செம்மறி ஆட்டுக்குட்டியின் மரணம் குற்றம் செய்த விசுவாசிக்கு ஜீவனை அருளியது. அது கச்சிதமாக ஒரு ஒப்பனையாக இருக்கிறது அல்லவா? குற்றமற்றதின் மரணம் குற்றமுள்ளவருக்கு ஜீவனை அருள்கிறது. மேலும் குற்றமற்ற கிறிஸ்துவின் மரணம் குற்றமுள்ள நமக்கு ஜீவனை அருளுகிறது. பிறகு தேவன் இரத்தத்தின் மூலமாக இப்பொழுது முதலாவது, அன்றைக்கு தேவன் அவர்களுக்கு இரத்தத்தின் மூலமாக ஜீவனை தந்து, மரணம் அவர்களை விட்டு கடந்து சென்றது என்பதை நிரூபித்தப் பின்னரே அவர்களை அந்த பிரயாணத்தில் புறப்படச் செய்தார். 22இன்னும் சற்று நேரத்தில் அதைக் குறித்து பார்க்க போகிறோம். இப்பொழுது அடுத்ததாக தேவன் செய்த காரியத்தை கவனியுங்கள் அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளாகவும் பிள்ளைகளாகவும் மாறின உடனேயே சரீர மரணமாகிய எதிரியானவன் அவர்களின் பின் தொடர்ந்தான். அவர்களை அப்படியே பாலைவனம் ஒரு பக்கமாகவும், சிவந்த சமுத்திரம் ஒரு பக்கமாகவும், மலைகள் ஒரு பக்கமாகவும் இருக்க, பார்வோனும் அவன் சேனையோடு லட்சக்கணக்கான போர்வீரர்களோடு அவர்களை மேற்கொள்ள அணிவகுத்து வந்தான். முதலாவதாக தேவன் ஆட்டுக்குட்டியின் மரணத்தின் மூலமாக அவர்களுக்கு ஜீவனைக் கொடுத்து, பிரத்தியட்சமானார். இப்பொழுது அவர்களுக்கு சரீரப்பிரகாரமான மீட்பைக் காண்பிக்கப் போகிறார். அல்லேலூயா‚ பாருங்கள். இரண்டையுமே தருகிறார், இயற்கையான மனிதனுக்கும் மற்றும் ஆவிக்குரிய மனிதனுக்கும் தேவையான இரட்சிப்பு மற்றும் சுகம். இரத்தத்தின் மூலமாக தேவன் அருளிய மீட்பின் வழியை அவர்கள் ஏற்றுக் கொண்டதனால் சங்காரத் தூதன் கடந்து சென்றுவிட்டான் என்பது நிரூபனமானது. அதேப்போல இப்பொழுது சரீர மரணத்தில் இருந்து தப்புவிக்க அவர் ஒரு வழியை உண்டாக்க போகிறார். அதாவது ஒரு விசுவாசி இரட்சிக்கப்பட்டபின் அவன் புற்று நோயோ அல்லது வேறு ஏதேனும் நோயினாலோ பாதிக்கப்பட்டாலும், தேவன் அவருடைய வல்லமையினால் எப்படியாக ஆத்துமாவை மீட்டெடுக்கிறாரோ அதேப்போல் சரீரத்தையும் மீட்டெடுக்கிறார். 23அவர்கள் இரத்தத்தின் கீழாக இருந்து இரட்சிக்கப்பட்டு விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆனாலும் பார்வோன் எதிரியானவன் அவர்களை அந்த வனாந்திரத்திலேயே அழிக்கும்படி முயற்சித்தான். ஆனால் தேவன் அவர்களின் சரீரத்தை மீட்கும்படிக்கு அவருடைய வல்லமையைக் காண்பித்தார். உங்களால் அதை புரிந்துக் கொள்ளமுடிகிறதா? நான் எதை பற்றி பேசுகிறேன் என்று தெரிகிறதா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்). அது வல்லமையினால் மீட்பு. அதன் பிறகு எதிரியானவன் அவர்களின் அருகாமையில் வந்த போது அந்த மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட அக்னிஸ்தம்பம் இஸ்ரவேல் மேல் இருந்து எழும்பி அவர்களுக்கும் மரணத்துக்கும் நடுவே நின்றார். இதை அப்படியே கொஞ்ச நேரம் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். நான் எதைச் சொல்லுகிறேன் என்று புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்). இப்பொழுது மரணமானது குறிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக ஒரு விசுவாசியின் அல்லது மறுபடியும் பிறந்த தேவ பிள்ளையின் வாசலுக்கு திருட்டுத்தனமாக வந்தால் தேவனுடைய தூதனானவர் உங்களுக்கும் அந்த நோயிக்கும் நடுவில் நிற்பார். இப்பொழுது நீங்கள் மரணத்தை சந்திக்க விரும்பினால் அது உங்கள் தனிப்பட்ட காரியம், ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. புரிகிறதா? அவர் உங்களுக்கும் மரணத்திற்கும் நடுவில் இருக்கிறார். 24இருபத்தி மூன்று வருஷங்களுக்கு முன்னர், ஒரு யூத மருத்துவமனையில், மருத்துவர் மோரிஸ் பிளெட்சர் நான் ஜீவிப்பதற்கு மூன்று மணி நேரம் கொடுத்தார். இந்த பட்டணத்தின் மிகச் சிறந்த அறுவை சிகிச்சையாளர் நான் ஜீவிப்பதற்கு மூன்று மணி நேரமே எனக்குத் தந்தார். ஆனாலும் இன்று இரவும் நான் ஜீவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லேலூயா‚ அது எதினால்? தேவனுடைய அநாதி கிருபையினால் அவருடைய தூதனானவர் என்னைப் பாதுகாக்க எனக்கும் மரணத்திற்கும் நடுவே நின்றார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அதற்கு நன்றிக் கடனாக ஐந்து லட்சம் ஆத்துமாக்களை இந்த இரவுப்பொழுதில் அவருக்காக வென்றேன். ஓ, காரியங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை தேவன் அறிந்திருக்கிறார், நாம் அவரை வெறுமனே பின்பற்றினால் போதும். நீங்கள் தேவனை வழிநடத்த முயற்சிக்காதீர்கள். தேவனை வழிநடத்தும்படி விடுங்கள். பாருங்கள்? நாம் தான் வழிநடத்தப்பட வேண்டியவர்கள். ஆகையால் தான் தேவன் நம்மை செம்மறி ஆடுகளுக்கு ஒப்பனையாக வைத்தார். நீங்கள் எப்பொழுதாவது தொலைந்து போன செம்மறி ஆட்டை பார்த்திருக்கிறீர்களா? உலகத்திலேயே உள்ளவைகளில் அது தான் பரிதாபமான விலங்கு. அதனால் தன் வழியை கண்டுபிடிக்கவே முடியாது. அது மரித்துப் போகும் வரையோ அல்லது ஓநாய் தின்றுபோடும் வரையோ அங்கேயே நின்று கத்திக் கொண்டிருக்கும். திரும்பிச் செல்ல அதற்கு வழியைக் கண்டுபிடிக்கத் தெரியாது. அதேப் போலதான் தொலைந்துபோன மனிதனும் செய்வதறியாது நிற்கிறான். அவனால் அதைக் குறித்து ஒன்றும் செய்யமுடியாது. தேவன் தமது கிருபையின் மூலமாகதான் கிறிஸ்துவிடம் உங்களை வழி நடத்த முடியும். ''பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். மற்றும் அவர் இழுக்கும்போது யாரெல்லாம் வருவார்களோ, நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன்“ என்று இயேசு வாக்குறுதி கொடுத்தார். என்னே ஒரு வாக்குத்தத்தம! 25ஓ, இந்தக் காரியம் இங்கு இருக்கும் ஒவ்வொரு நபரின் இடதுபக்கத்திலுள்ள ஐந்தாவது விலா எலும்பின் பின்னாடி இருக்கும் அவர்கள் இருதயத்தின் மையத்தை தொடும்படி ஊடுருவ விரும்புகிறேன். எல்லா விதமான வியாதிகளோடும் உள்ள மக்கள் இந்தக் கட்டிடத்தை விட்டு அதை பெற்றுக் கொள்ளாமலேயே சந்தோஷமாகக் களிகூர்ந்து இங்கிருந்து கடந்து செல்வதை உங்களால் பார்க்க முடியும். முடவர்கள் சுகமடைந்து சாதாரணமாக நடந்துச் செல்லமுடியும். ஆனாலும் அதை ஏற்க மறுத்துவிடுவார்கள். பாருங்கள்? உனக்கு இதை நம்பி ஏற்றுக் கொள்ள பயம். முன் செல்ல பயப்படுகிறீர்கள். தேவனே இறங்கி வந்து, உன்னை காப்பாற்ற காத்துக் கொண்டிருக்கிறாய்.தேவன் அவ்வாறு செய்வதில்லை. நீதான் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அவர் வாக்குத்தத்தத்தை கொடுத்து, ''பின்பற்றி வா“ என்பார், அதன் பின் நீதான் பின்பற்றி செல்ல வேண்டும். 26இப்பொழுது அன்றுள்ள இஸ்ரவேலின் பிள்ளைகளைக் கவனியுங்கள். தேவன் அவர்களுக்கும் அபாயத்துக்கும் நடுவே வந்து நின்றார்... மீட்பின் வல்லமை அல்லது வல்லமையினால் மீட்பு. இரத்தத்தினால் மீட்பு, வல்லமையினால் மீட்பு. நேற்றைக்கு இரவு நாம் பார்க்கும்போது அவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடந்து மறுமுனையிலே தவழ்ந்து ஏறிக் கொண்டிருக்கிறதை பார்த்தோம். ஆனால் எதிரிகளின் இரதங்களோ உடைந்து சக்கரங்கள் கழன்று போனது. அவர்களின் குதிரைகள் பயத்தினால் நடு ஆற்றில் இங்கும் அங்குமாக திணரிக் கொண்டிருக்க, சக்கரங்களோ மணலில் சிக்கிவிழுந்தது. ஒரு கூட்ட எதிரிகள் பித்து பிடித்தது போல் ஓடத் துவங்கினார்கள். ஆனாலும் இஸ்ரவேலரோ கரையேறி தேவன் தம் கரத்தை நீட்டி எல்லா எதிரிகளையும் அழிப்பதை பார்த்தார்கள். இரத்தத்தின் கீழாக இருக்கும் ஒரு விசுவாசிக்கு ஓர் அழகான ஒப்பனையாக இருக்கிறது. அவர்களுக்கு இடையிலே கடந்து சென்றதன் மூலமாக சுகமடைந்து குறிப்பிட்ட காலம் மட்டுமாக அவனுடைய ஜீவன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தேவன் மட்டும் அவர்கள் நடுவில் நின்றிராவிட்டால் அவர்களெல்லாரும் சரியாக அந்த வனாந்தரத்திலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள். தேவன் மட்டும் எனக்கும் மரணத்திற்கும் நடுவில் நின்றிராவிட்டால் நானும் என்றைக்கோ மரித்திருப்பேன். இங்கிருக்கிற விசுவாசிகளும், ஒவ்வொருத்தரும், தேவன் மட்டும் உங்களுக்கும் மரணத்திற்கும் நடுவில் நின்றிராவிட்டால் என்றைக்கோ மரித்திருப்பீர்கள். ஆகவே தேவன் அவருடைய ராஜாதிபத்திய கிருபையினாலும் இரக்கத்தினாலும் மரணத்திற்கும் விசுவாசிக்கும் நடுவே நிற்கிறார். அல்லேலூயா‚ 27இதுதான் காரியம். ஒரு விசுவாசியின் அடுத்த கட்டம் என்ன? அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெறுவதே ஆகும். மோசே இஸ்ரவேலின் புத்திரர்களை அந்த சிவந்த சமுத்திரத்தண்டை அழைத்து சென்று அதிலே ஞானஸ்நானம் கொடுத்தான். அந்த கடல், தண்ணீர், அது ஆவியை குறிக்கிறது. அவன் அந்த கன்மலையை அடித்த போது தண்ணீர் வந்தது. அது கிறிஸ்துவிற்கு ஒப்பனையாக இருக்கிறது. யோவான் 3:16-ல் ''தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? வனாந்திரத்திலே, அழிந்துப்போகும் மக்கள் அடிக்கப்பட்ட கன்மலையினால் காப்பாற்றப்பட்டார்கள். பாவத்திலும் அக்கிரமத்திலும் அழிந்துக் கொண்டிருக்கும் மக்கள் இன்றைக்கும் அந்த அடிக்கப்பட்ட தேவக்குமாரன் அவர்கள் இடத்தை எடுத்ததினால் இரட்சிக்கப்படுகிறார்கள் தண்ணீரும், ஆவியும் பிரவாகித்து வருகிறது. இதை கவனியுங்கள், இப்பொழுது நீங்கள் இதைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் ஊடாக கடந்துச் சென்றது பரிசுத்தாவியானவரைப் பெற்றுக் கொள்ளுவதற்கு ஒப்பனையாக இருக்கிறது. விசுவாசியானவன் மரணத்தில் இருந்து மீட்க்கப்பட்டு ஜீவனுக்குள்ளாக வந்தபின் தேவனின் வல்லமை அவனுடைய சரீரத்தை சுகமடையச் செய்தது. இப்பொழுது அவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெறுவதற்கான நபராய் இருக்கிறான். இப்பொழுது அவன் செல்ல வேண்டிய நீண்ட பிரயாணம் ஒன்று இருக்கிறது. அந்த பிரயாணத்தை அவன் மேற்கொள்ளுவதற்கு முன்பதாக அதற்கு தேவையானவற்றை அவன் பெற்றிருக்க வேண்டும். ஆமென். இது பெந்தெகொஸ்தேவிற்கு பரிபூரணமான ஒப்பனையாக இருக்கிறது. 28கவனியுங்கள், இப்பொழுது அவர்கள் தவழ்ந்து தவிழ்ந்து கரையை அடைந்தனர். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்ட பின்பும் பழைய காரியங்கள் சிலவற்றை உங்களால் விட முடியவில்லை. இந்த காரியத்தை விட முடியவில்லை; இல்லையென்றால் அந்த காரியத்தை விட முடியவில்லை. கொஞ்ச காலம் பிறகு தேவன் உங்களுக்கு நலமான காரியத்தை செய்தாலும் உங்களால் புகைபிடிப்பதை விடமுடியவில்லை ஒரு சில நேரம் அவ்வப்போது சக மக்களோடு மது அருந்த வேண்டியதிருக்கும். ஆனால் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான், ''சிவந்த சமுத்திரத்தின் ஊடாக கடந்துச் செல்லுங்கள்“. அவர்கள் மறுபக்கமாக வெளியே வந்தார்கள். இதுதான் காரியம், நீங்கள் இதை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அவர்கள் தவழ்ந்தபடியே அக்கரைக்கு வந்து, திரும்பிப் பார்த்த போது, இதோ அவர்கள் கண்டது அவர்களை அடித்து சிலரை கொன்றும் போட்ட அந்த பழைய ஆளோட்டிகளைப் போலவே புற்றுநோய், சிகரெட், புகையிலை, மற்றும் விஸ்கியும் இதே காரியங்களை தான் செய்கிறது. அது நம் பிள்ளைகளை பைத்தியகாரர்களை போலாக்கி மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புகிறது. அவர்கள் உலகத்திலுள்ள மனநிலை தளர்வு ஏற்பட்டவர்கள் போலவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் திரும்பி பார்த்த போது அங்கே திக்கற்று, உதவியற்று கடலிலே மரித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். சகோதரர்களே, அவர்கள் அப்பொழுது கொண்ட கூட்டத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். 29மோசே, இதை குறித்து நான் ஆழமாக செல்கிறேன். ஆழமாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவிற்கு அடுத்து ஜீவித்ததில் மகத்தான தீர்க்கதரிசி மோசே. கிறிஸ்துவிற்கு அடுத்ததாக மோசேயை தவிர தேவனிடத்தில் பேசிய மனிதர் யாரும் இல்லை. அவர், ''உங்களுக்குள் யாரேனும் ஒருவர் ஆவிக்குறியவராகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தால், நான் அவர்களுக்கு தரிசனங்களை காண்பித்து என்னை வெளிப்படுத்துவேன். ஆனால் என்னுடைய ஊழயக்காரனாகிய மோசேயிடமோ அவன் கேட்கும்படியாய் என உதட்டைக் கொண்டு பேசுவேன் என்றார். அது சரியே. மோசே ஒரு கன்னியமான மனிதன். அவனுக்கு ஒரு அனுபவம் உண்டானது. அவன் அந்த ஆளோட்டிகள் எல்லோரும் மரித்து போவதை பார்த்தான். இதற்கு மேல் அவர்களை என்றைக்குமே பார்ப்பதில்லை என்பதை அறிந்திருந்தான். அவர்களை எந்தெந்த காரியங்களெல்லாம் அவர்களை விரட்டியதோ, சாட்டையால் அடித்ததோ, அவையெல்லாம் முடிந்து போயிற்று. அப்பொழுது அவன் தன் கரங்களை உயர்த்தி ஆவியில் பாடினான். ஓ, என்னே! இது வரைக்கும் வேறு எந்த காரியமும் அதற்கு ஒப்பனையாக இல்லை, நாம் அக்கரையிலே மகிமைக்கு செல்லும் மட்டும் அதுபோன்ற ஒன்று நிகழவும் மாட்டாது. அங்கே ஒரு முழுமை ஏற்பட்ட போது, அவன் ஆவியிலே பாடினான். மற்றும் நம்முடைய சரீரம் மீட்கப்படும்போது... பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளிலே வந்தது நாம் கடலை கடந்து சென்றதற்கு ஒப்பனையாக இருக்கிறது. அது பெந்தெகொஸ்தேவிற்கு ஒப்பனையாயிருக்கிறது. மற்றும் மோசே ஒரு ஒப்பனையாக, அவன் அதை கடந்து வந்து போதோ ஆவியில் நிரம்பினவனாய் பாட்டு பாடினான். அது பெந்தெகொஸ்தேயின் நாளிலே வந்தது. நம்முடைய சரீரமானது பரிபூரணமாக்கப்பட்டு மீட்கப்படும்போது; இப்பொழுது நம்முடைய ஆவியானது பரிபூரணமாக மீட்கப்பட்டு சரியாக இருக்கிறது, ''அதனால் கெட்டு போக முடியாது. அது நித்திய ஜீவனை பெற்றிருக்கிறது“. வேதாகமம் அப்படிதான் சொல்கிறது. 30ஓ, என் ஆவி களிகூறுகிறது. ஏன் தெரியுமா? ஏனென்றால் அது ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் ஆத்துமாவை அதிலே நங்கூரமிட்டவனாய், ''பிசாசே நீ என்னதான் சர்ப்பம் போல உஸ் உஸ் என்று ஒலி எழுப்பினாலும் அது என்னை கொஞ்சமும் தொந்தரவு செய்யாது. ஏனென்றால் நான் யாரை நம்பியிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் நான் அந்த நாளுக்கென்று அவரிடம் ஒப்படைத்த காரியங்களை அவர் பத்திரமாக வைத்திருப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்”. ஆமென். நமக்கு இன்றைக்கு லூயிவில்லில் தேவைப்படுவதெல்லாம் பண்டைய காலத்து பில்லி சன்டேயின் மனம் உடைந்த அல்லேலூயா எழுப்புதல் கூட்டங்கள்தான். நிச்சயமாகவே நமக்கு தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட பண்டையக் காலத்து பாணியிலான பெந்தெகொஸ்தே அனுபவம் தான். ஆம் ஐயா. 31கவனியுங்கள் நம்முடைய சரீரம் மீட்கப்படுவதற்கு நம்முடைய தெய்வீக சுகம் பெறுவது நிழலாயிருக்கிறது. அன்றைக்கு இருந்தது வெறும் பெந்தெகொஸ்தேயின் நிழல் ஆனால் இரட்சிப்பிற்காக அந்த நிழலாட்டத்தின் நேரத்திலேயே என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக எப்படி நடந்தார்கள் என்று பாருங்கள். நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டார்கள், வாளுக்கு தப்பினார்கள், அக்கினி சூளையிலிருந்து வெளியே வந்தார்கள், சிங்க கெபியிலிருந்து வெளியே வந்தார்கள், மற்றும் அநேக காரியங்களை செய்தார்கள். இவையெல்லாம் நிழலியே, அதாவது பெந்தெகொஸ்தேயின் நிழலிலேயே அவர்கள் செய்தார்கள. அல்லேலூயா‚ இப்பொழுது கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் நமக்கு பரிபூரண மீட்பு உண்டு. அன்றைக்கு அவர்கள் காளைகள் மற்றும் ஆட்டு கடாக்களின் இரத்தத்தின் கீழாக இருந்தபடியால் அவர்களால் பரிபூரண மீட்பை பெற முடியவில்லை. அது பாவத்தை எடுத்துப் போடாமல் வெறுமனே மூட மட்டுமே செய்தது. ஆனால் இருப்பதிலேயே மகா பரிசுத்த நீதியுள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டபோது, பாவம் அதற்கு மேல் மூடப்படவில்லை. அவை முற்றிலுமாக நீக்கப்பட்டு அகற்றப்பட்டது. இப்பொழுது விசுவாசி தன்னுடைய ஆக்கியோனுடைய சமூகத்திற்கு செல்கிறான். அல்லேலூயா! 32அன்றைக்கு மோசே நிழலாட்டத்தில் இருக்கும் போதே ஆவியில் நிரம்பி பாடியிருப்பார் என்றால் இங்கே வெளிப்பாட்டின் புஸ்தகத்திலே தங்கள் சரீரத்தின் பரிபூரண மீட்படைந்தோர் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலில் நின்று மோசேயின் பாடலை மீண்டுமாய் பாடினார்கள். அது வெளிப்பாட்டின் புஸ்தகத்தில் இருக்கிறது. பரிசுத்த ஆவியினால் நிறைந்த கூட்டம் பற்றி பேச வேண்டுமா? அவர்கள் அப்படிப்பட்டதான ஒரு கூட்டத்தை அந்த கரை ஏறின உடனேயே பெற்றிருந்தார்கள். தீர்க்கதரிசி மிரியம் ஒரு கண்ணியமான ஸ்திரீ, அவள் மோசேயின் சகோதரி. அவள் ஒரு தீர்க்கதரிசி. அவள் மிகவும் உற்சாகப்பட்டு ஒரு தம்புருவை எடுத்துக் கொண்டு அதை அடித்தப்படி அந்த கரையில் ஓடி ஓடி ஆவியில் நிரம்பினவளாய் நடனமாடினாள். அவளை பார்த்து இஸ்ரவேலின் குமாரத்திகளும் அங்கே ஆவியில் நிரம்பினவர்களாக நடனமாடினார்கள். இப்பொழுது அது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதில்லையென்றால் வேறு எதுவென்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அங்கே இருந்த பாரம்பரிய மற்றும் கன்னியமாய் நடக்கும் தேசங்களெல்லாம் தங்கள் தொலை நோக்கி மூலமாக இங்கு நடப்பவைகளையெல்லாம் கவனிப்பார்களென்றால் இவர்களை பார்த்து, ''மத வெறியர்கள்“ என்று கூறியிருப்பார்கள். அது சரிதான். ஆனால் இவற்றையெல்லாம் செய்தது தேவன். அது நிச்சயம! இப்பொழுது கண்ணியமானவைகளெல்லாம் இன்றைக்கு தேவன் ஆசீர்வதித்தவைகளையெல்லாம் கீழ்த்தரமாக பார்க்கிறார்கள். சரி தானே! 33எனக்கு இப்பொழுது ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு மனிதனிடம் அருமையான பெரிய பண்ணை ஒன்று இருந்தது. அதில் பெரிய பெரிய களஞ்சியங்ளைக் கட்டினான். அது பார்ப்பதற்கு மிகவும் அருமையானதாகவும் மேன்மையானதாகவும் இருந்தது. ஆனால் அந்த விவசாயியாகிய மனிதனோ மிகவும் சோம்பேரி. சரி, இப்பொழுது அவனது பக்கத்து நிலத்தில் மற்றோரு விவசாயி தங்கியிருந்தான். இவனிடமிருந்த மாதிரி அவனிடம் சிறந்த களஞ்சியங்களெல்லாம் இல்லாமிலிருந்தாலும் அவன் நேர்த்தியாக விவசாயம் செய்து அந்த வருடம் தன்னுடைய களஞ்சியத்தில் அருமையான ஆகாரத்தை சேர்த்து வைத்திருந்தான். இப்பொழுது இரண்டு பண்ணையிலும் ஒவ்வொரு கன்றுக்குட்டி பிறந்தது. வசந்தக்காலம் வந்தபொழுது இரண்டு கன்றுக்குட்டிகளையும் தொழுவத்திலிருந்து வெளியேவிட்டார்கள். இந்த பக்கம் இருந்த குட்டி நன்றாக தீவனமிடப்பட்டிருந்தது. காற்று அதன் மேலே வீசின உடனே அது தன்னால் முடிந்தமட்டும் வேகமாக ஓடி தன் பின்னங்கால்களை உதைத்தபடி துள்ளித் துள்ளி, உற்சாகமாக சத்தமிட்டபடியே ஓடிக் கொண்டேயிருந்தது. இந்த விவசாயியும் தன்னுடைய கன்றுக்குட்டியை வெளியேவிட்டான். அவனுக்கு விவசாயம் செய்யவும் சோம்பேரித்தனம், அதை போஷிக்கவும் சோம்பேரித்தனம். ஆகையால் அதற்கு வெறும் களைகளை மட்டும் கொடுத்திருந்தான். அதைப் பார்க்கும் போது எனக்கு சில போதகர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அது சரிதான். மிகவும் சோம்பேரிகள்!அங்கிருப்பதெல்லாம் வெறும் அற்புதமான களஞ்சியங்கள் மட்டும்தான். ஆனால் அவை மிகவும் அற்பமாயிருக்கிறது. அதில் கொஞ்சம் உணவையாவது கன்றுக் குட்டிகளுக்காக வையுங்கள். அது சரியே‚ பரிசுத்த ஆவியைப்பற்றி வல்லமையாக பிரசங்கிக்கும் போது அது அவர்களை சுட்டெரிக்கதான் செய்யும். அது உண்மை. ஆனால் அந்த பண்டைய கால சுவிசேஷ முறைமையின்படியான சுட்டெரிப்பே சபைக்கும் அதன் அங்கத்தினர்களுக்கும் அவசியமாயிருக்கிறது. கவனியுங்கள். 34இந்த சிறிய கன்றுக்குட்டி மிகவும் பரிதாபமாக இருந்தது. அது அந்த தொழுவத்திலிருந்து வந்த போது அதனால் நிற்க கூட முடியவில்லை. சற்று வேலியில் உள்ள இடைவெளியின் மூலமாக பக்கத்து பண்ணையை எட்டி பார்த்தது. அங்கே பார்த்தால் அங்கிருந்த கன்றுக்குட்டி நல்ல புஷ்டியாகவும் செழிப்பாகவும் இருந்தது. அது உற்சாகமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அது குளிர்காலம் முழுவதுமாக நன்றாக தீவனமிடப்பட்டிருந்தபடியால் சந்தோஷமாக இருந்தது. பட்டினியால் வாடியிருந்த இந்த கன்றுக்குட்டியோ அந்த கன்றுக்குட்டியை பார்த்து, ''அப்பா, என்ன ஒரு மதவெறி“ என்றது. நிச்சயமாகவே வாடி மெலிந்து போன நிலமையிலிருந்த அந்த கன்றுக்குட்டிக்கு வேறு எதுவும் சிந்திக்க முடியவில்லை. ஆனாலும் நான் உங்களுக்கு சொல்லட்டும், குளிர்காலம் முழுவதும் நன்றாக சாப்பிட்டு கொழுத்திருந்த அந்த கன்றுக்குட்டிக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதை நன்றாக அறிந்திருந்தது. அந்த இதமான காற்று அதன் மீது வீசினவுடனேயே அது மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது. தேவனுடைய ஆவியினால் பிறந்த எந்த மனிதனையும் மதவெறியன் என்றும் மற்ற பெயர்கள் கொணடே அழைப்பார்கள். ஆனாலும் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது போல இதமாய் வசந்தக் கால காற்றாக பரிசுத்த ஆவியானவர் வீசும்போது ஏதோ ஒன்று நிச்சயமாகவே நடக்க போகிறது. சரியாக இப்பொழுதே அந்த இதமான காற்று வீசுகின்றது, நீங்களெல்லோரும் சுவிசேஷத்தினால் கொழுத்து செழிப்பாக மகிழ்ச்சியோடு இருக்கிறீர்கள். உங்கள் பின்னங்கால்களை உதைத்து துள்ளி சந்தோஷமாயிருங்கள். 35அந்த விதமாகத்தான் மிரியாமும் அவர்களோடிருந்தவர்களும் செய்தார்கள். இதோ அவர்கள் பின்னாலே திரும்பி முந்தைய நாட்களில் செய்த அவர்களுடைய பழைய கிரியைகள் எல்லாம் மரித்து கடந்துபோனதை பார்த்தார்கள். இப்பொழுது அவர்கள் தேவன் இரத்தத்தை ஏற்றுக் கொள்வதை பார்த்திருந்தார்கள், தம்முடைய வல்லமையினால் அவர் அளித்த தெய்வீக சுகத்தை கண்டிருந்தார்கள், அவர்கள் மத்தியில் இருக்கிறதை கண்டார்கள், சிவந்த சமுத்திரத்தின் ஊடாக கடந்து சென்று ஆவியிலே அபிஷேகம் பெற்று அக்கரை சென்று மகத்தான நேரத்தை கொண்டிருந்தார்கள். ஆகையால் மற்ற ஸ்தாபனங்களெல்லாம் அவர்களை குறித்து என்ன நினைத்தாலும் அதைப்பற்றி எந்த கவலையுமில்லாமல் இருந்தார்கள். ஆமென். இது இன்றைக்கும் தைரியமாய் வெளியே வரும் ஒரு விசுவாசிக்கு கச்சிதமான ஒரு ஒப்பனையாக இருக்கிறதே. தேவன் அவர்களுடைய எல்லா தேவையையும் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அவர் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவரொன்றும் அவர்களிடத்தில், “நான் சுகத்தை கொடுப்பதற்கு ஒருவழியை ஏற்படுத்துவேன், அதற்கு ஒரு வழியை ஏற்படுத்துவேன், அல்லது இதற்கு ஒரு வழியை ஏற்படுத்துவேன்” என்று கூறவில்லை. அவரோ, ''நான் உங்களோடு இருப்பேன்“ என்றே கூறினார். அல்லேலூயா‚ அவர், ''இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்“ என்றுதான் நம்மிடம் சொன்னார். அவ்வளவுதான் நான் உங்களுக்கு சொல்ல முடியும். நீங்கள் வேறு எதையும் குறித்து தர்க்கம் பண்ண வேண்டாம். எனக்கு அவர் இங்கு இருந்தாலே போதும் தெய்வீக சுகம் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. அவர் அன்றைக்கு எப்படி இருந்தாரோ இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறார், ஆகையால் நீ உன்னுடைய வேதபாண்டித்தியத்தை எடுத்துக் கொண்டு அதனுடனேயே மூழ்கி போ. சகோதரனே, நானோ ''இயேசுக் கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்” என்பதையே விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அவர், ''இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்“ என்றே சொன்னார். ஆம். 36இதோ அவர்கள் அங்கே வெளியே வந்தார்கள், அவரும் அவர்களுடனேயே இருந்தார். இப்பொழுது அவர் சொன்னார்… அவர்கள் தலையில் சுமந்துக் கொண்டு வந்த அந்த சிறு கூடையிலிருந்த அப்பங்கள் தீர்ந்து போயிற்று. எல்லாம் சாப்பிட்டாயிற்று, ஏதும் மீதமில்லை. அன்றிரவு சற்று பசியோடேயே எல்லோரும் உறங்க சென்றனர். ஆனால் இதோ காலையில் அவர்கள் எழும்பின போதோ அங்கே நிலத்தில் எல்லா இடங்களிலும் அப்பங்கள் இருந்தது. தேவன் அவ்விதமாகதான் காரியங்களை செய்கிறார். கடைசி நிமிடம் வரை அனுமதித்து, பின்னர் அதைக் குறித்து தான் என்ன செய்ய முடியும் என்பதை காண்பிப்பார். ஆம், அவர் அப்படி செய்வதை விரும்புகிறார். அதை நிச்சயமாய் விரும்புகிறார். அவர் தமது மக்களை ஆச்சரியப்படுத்துவதில் விருப்பமுள்ளவர். புருஷர்களாகிய நீங்களும் உங்கள் மனைவியிடம் அவ்வாறு செய்ய விரும்புவீர்கள். அவளுடைய பிறந்தநாள் வரும்போது பொறுமையாக காத்திருந்து அவளை ஒரு யுகத்திலேயே இருக்கும்படி செய்வீர்கள். ஏனென்றால் நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள். ஆகையால் தான் சில நேரங்களில் எல்லாம் முடிந்தது போல தோன்றும் ஒரு நிலைக்கு நம்மை அனுமதிக்கிறார். அவர் நம்மை அவ்வளவாய் நேசிக்கின்றபடியால் அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையை நிரூபித்து காண்பிக்க விரும்புகிறார். நிச்சயமாகவே அவர் நம்மை நேசிப்பதாலேயே அப்படி செய்கிறார். ஆகையால் நாம் நம்முடைய கடைசியான அந்த அடியை எடுத்து வைக்கும் அந்த நிலை வரும்பொழுதே அவர் காட்சியில் வருகிறார். அவர் அந்த எபிரேய பிள்ளைகளை அந்த அக்கினிச் சூளைக்குள்ளேயே நுழையும்படி விட்டுவிட்டார், ஆனாலும் அந்த நெருப்பு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்க அங்கே ஒரு நான்காவது மனிதன் விசிறியோடு நின்றுக் கொண்டிருந்தார். கவனத்தீர்களா? அவர் எப்பொழுதும் இருக்கிறார், ஒருபோதும் விலகுவதில்லை. அவர் எப்பொழுதுமே அருகில் இருக்கிறார். ''கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குவார்“. 37அங்கே அந்த இரவிற்குப் பின்... அடுத்த நாள் காலையில் அப்பங்களை சேகரித்தார்கள். சிவந்த சமுத்திரத்தை அப்பொழுதுதான் கடந்து வந்த இஸ்ரவேலர்களை என்னால் காண முடிகிறது. இரத்தத்தால் அப்பொழுதுதான் மீட்கப்பட்டிருந்தார்கள். தேவனுடைய சுகமாக்கும் வல்லமையை கண்டிருந்தனர்... அல்லது இஸ்ரவேலுக்கும் எகிப்துக்கும் இடையில் நின்ற அற்புதமான வல்லமை, இடையில் நின்ற தேவன்... அவருக்குப் பின்னால் இருந்த எதிரிகளை முழ்கடித்ததைக் கண்டார்கள். முன்பிருந்த புற்று நோய் நிரந்தரமாய் போனது, குருட்டுத்தனம் போனது, செவிட்டுத்தனம் போனது, சக்கரை வியாதி போனது எல்லாமே இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தில் மூழ்கிப் போனது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? என்னே‚ இப்பொழுது வீதியில் நீங்கள் நடந்து போகும்போது ஒரு பழைய குறை கூறுபவன், ''ஒரு நிமிடம் பொறு. நிச்சயமாக குணமாகிவிட்டதா?“ என்று கேட்கலாம். ''என்னிடத்தில் பேசாதே“, ஆமென். ஓ, என்னே‚ இதோ அவர்கள் வெளியே சென்று சேகரித்து சேகரித்து புசித்து மிக சந்தோஷமாய் இருப்பதை காண்கிறேன். அது பார்ப்பதற்கு ஆதியிலுள்ள பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட கூட்டத்தை போல இருக்கிறது. இதோ பரிசுத்த ஆவியானவர் ஒரு சிறு பரிசுத்தவானின் இருதயத்தை தொட்டவுடன் அவன் அப்படியே அவன், ''கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக“ என்று உரக்க சத்தமிடுவான். ஆம் ஐயா, அது ஒரு பண்டைய கால கூட்டம் போல இருந்தது. அவர்கள் நிரம்பி வழியத் தக்கதாய் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது ஒரு அருமையான நேரமாய் இருந்தது. 38இப்பொழுது அந்த அப்பமானது தீரவேயில்லை. அவர்களுடைய பிரயாணம் முழுவதும் அவர்கள் அதை பெற்றுக் கொண்டேயிருந்தார்கள். அது சரிதான். அது நமக்குள் இருக்கும் பெந்தெகொஸ்தேக்கு கச்சிதமான ஒப்பனையாக இருக்கிறது. இந்த காரியம் இயற்கையில் நடந்தது. அந்த அப்பம் ஒருபோதும் தீரவேயில்லை. வாக்குத்தத்த பூமிக்குச் செல்லும் அவர்கள் அதே அப்பத்தை பெற்றார்கள். அது சரிதானா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்) வேதம் வாசிப்பவர்கள் அதை அறிவீர்கள். சபையானது அன்று பெந்தெகொஸ்தேயின் நாளிலே மேல்வீட்டு அறையில் கூடியிருந்தபோது முதலாவது துவங்கப்பட்டது. ''அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று“. அன்றைக்கு இறங்கின அதே பரிசுத்த ஆவிதான் இன்றைக்கும் இறங்குகிறது. அதிலிருந்து கடைசி நாள் மட்டுமாக கடந்து செல்லும். அதுவே நம்முடைய அப்பம். அவர்கள் இயற்கையான அப்பத்தால் போஷிக்கப்பட்டார்கள், நாமோ ஆவிக்குரிய அப்பத்தால் போஷிக்கப்படுகிறோம். 39இயேசு, ''நானே தேவனிடமிருந்து பரத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்“, என்றார். ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருஷம் மன்னாவைப் புசித்தார்களே“ என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு அவரோ, ''அவர்களில் ஒவ்வொருவரும் மரித்து போனார்களே“ என்றார். அது உண்மை தான், ஐயா. ''ஆனாலும் என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாட்களில் எழுப்புவேன். நானே தேவனிடமிருந்து பரத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தை புசிக்கிறவனெவனும் மரிப்பதேயில்லை.” பார்த்தீர்களா. அவர்களுக்கு இயற்கையானது. நமக்கோ ஆவிக்குரியது. ஓ, வேறு எந்த ஒரு காரியத்திற்காகவும் இந்த அற்புதமானதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். 40ஓ, ''சகோதரர் பிரான்ஹாம் நீங்கள் ஒரு மத வெறியர் என்று எங்களெல்லாருக்கும் தெரியும்“ என்று நீங்கள் சொல்லுவீர்கள். ஆனால் அது எனக்கே தெரியும். கிறிஸ்துவுக்காக நான் ஒரு முட்டாளாக இருக்கிறேன். யாருக்காக நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை பிசாசுக்கு முட்டாளாக இருக்கக் கூடும். சரியே‚ ஆகவே நான் கிறிஸ்துவுக்காக முட்டாளாகவே இருக்க விரும்புகிறேன். நீங்களும் அப்படி இருக்க விரும்பமாட்டீர்களா? (சபையார் ''ஆமென்” என்கின்றனர்) சரி. 41கவனியுங்கள் அந்த மன்னா பற்றி இன்னொரு காரியம்: அவர்கள் அதைச் சுவைக்கும் போது, ''அதன் சுவை தேனைப் போல் இருக்கிறது“ என்று அவர்கள் சொன்னார்கள். ஆம் அது இனிப்பாகத்தான் இருந்தது. அந்த பழைய பரிசுத்தவான்கள் தங்கள் உதடுகளைச் சப்பி உண்ணுவதை என்னால் பார்க்க முடிகிறது. அது நன்றாக இருந்தது. இதை எப்பொழுதாவது சுவைத்திருக்கிறீர்களா? இதுவும் நன்றாக இருக்கும். ''கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அதன் சுவை கன்மலையில் இருக்கும் தேனைப்போல இருக்கும்“. இந்த கூற்றை அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன். அநேக முறை அது அக்காலத்தில் தாவீது தன் சங்கீதத்தில், ”அதன் சுவை கன்மலையில் இருக்கும் தேனைப் போல் இருக்கும்“ என்று சொல்லியிருக்கிறான். தாவீது மேய்ப்பனாக இருந்தபடியால் அவன் ஒரு தோல் பையை தன்னுடைய பக்கவாட்டத்தில் வைத்திருப்பான். அதில் எப்பொழுதும் தேன் இருக்கும். இன்றைக்கும் பாலஸ்தீனத்தில் இருக்கும் பண்டைய காலத்து மேய்ப்பர்கள் அதை பின்பற்றுகிறார்கள். அவர்களுடைய செம்மறி ஆடு எப்பொழுதெல்லாம் வியாதிப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் முதலாவதாக அந்த தேனை எடுத்து அங்கிருக்கும் சுண்ணாம்பு பாறையில் தேய்ப்பார்கள். அந்த செம்மறி ஆட்டுக்கு தேன் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த பாறையில் இருக்கும் தேனை அது நக்கும். அப்படி நக்கும்போது அந்த சுண்ணாம்புக் கல்லில் இருக்கும் ஏதோ ஒரு காரியம் அந்த சுகவீனமான செம்மறிஆட்டை சுகப்படுத்துகிறது. இப்பொழுதும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த இரவுப்பொழுதிலே நமக்கும் ஒரு தோல் பை நிறைய தேன் உள்ளது. அதை அந்த கன்மலையான கிறிஸ்து இயேசுவின் மேல் வைக்கப் போகிறோம். வியாதியாயிருக்கிற செம்மறி ஆடுகள் அதை நக்குமானால் அது நிச்சயமாக சுகமடையும். அப்படியே அதை நக்கி நக்கி நக்கி சாப்பிடுங்கள். அதை சுவைக்கும் போது நிச்சயமாக அந்த தேனோடு நீங்கள் அந்த சுண்ணாம்புக் கல்லையும் உட்கொள்வீர்கள். அது மிகவும் நிச்சயமுடையதாக இருக்கிறது. இப்பொழுது அதை நாம் சபையின் மேலாக வைக்கப் போவதில்லை அது சேர வேண்டிய இடமான கிறிஸ்துவின் மேலேயே அதை நாம் வைப்போம். அது சரி தான். ஏனென்றால் மற்ற மீட்பின் ஆசீர்வாதங்களைப் போல சுகமானதும் கிறிஸ்துவுக்குள்ளாகவே இருக்கிறது. ஆமென். கவனியுங்கள். 42மற்றுமொரு காரியம்: அது அங்கு பொழியும் போது வெளியே சென்று அனேக ஓமர்கள் நிறைய எடுத்து வைக்க வேண்டும் என்று ஆரோனுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் அதை இரண்டாம் நாளுக்காக எடுத்து வைப்பார்கள் என்றால் அது கெட்டுப் போய்விடும். அதேப்போல இந்த இரவில் பரிசுத்தாவியானவரைக் கொண்ட மக்கள் மத்தியில் ஒரு காரியம் இருக்கிறது. நீங்கள் இப்படியாக யோசிக்கிறீர்கள். இருபது வருஷம் முன் எங்களுக்கு நல்ல செய்தி இருந்தது. எங்களுக்கு ஒரு நேரம் இருந்தது என்று. அப்படியென்றால் இந்த இரவில் நீங்கள் எதை பெற்றிருக்கிறீர்கள்? அது தான் காரியம் ஒவ்வொரு இரவும் அது விழுந்தது. ஓய்வு நாளைத் தவிர ஒரு நாளும் அது தவறியதில்லை. அதுசரி தான். மற்றும் தேவன் அதை ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு மணிநேரமும், புதிதாக பொழியச் செய்தார். 43கவனியுங்கள், அங்கே ஓமர்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. அவர் அவர்களிடம், ''இப்பொழுது கவனியுங்கள், நீங்கள் உங்களுடைய தேசத்திற்கு வரும்போது உங்கள் பிள்ளைகள் இதைக் குறித்து விசாரிக்கும் போது...“ ''ஆசாரியத்துவத்திற்குள்ளாக வரும் ஒவ்வொரு ஆசாரியனும், நியமிக்கப்பட்டு, அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளாக வருவதற்கு அனுமதி பெற்றவுடன், உள்ளே பிரவேசித்து ஆதியிலே முதன் முதலாக விழுந்த அந்த அசலான மன்னாவை புசிக்க உரிமை உண்டு” என்றார். முதன் முதலாக விழுந்த அந்த அசலான மன்னாவை அவர்கள் எடுத்து ஒரு ஓமரில் வைத்திருந்தார்கள். அது ஆசாரியர்களுக்கென்று மட்டும் பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நீங்கள், ''சகோதரர் பிரான்ஹாம், இன்றைக்கு அது எதற்கு ஒப்பனையாக இருக்கிறது“ என்று கேட்கலாம். நாமே ஆசாரியர்களாக இருக்கிறோம் இல்லையா?. ''நீங்கள் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், விசேஷித்த ஜனமாயும் இருக்கிறீர்கள். உங்களுடைய உதடுகளின் கனிகளால் தேவனுக்குப் பலிகளை செலுத்துகிறீர்கள். அவர் நாமத்திற்கு நன்றி சொல்லுகிறீர்கள்“. ஆமென். இதுதான் காரியம். இப்பொழுது பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவியானவர் விழுந்தாரே, அதுவே நம்முடைய மன்னா. 44இப்பொழுது பழைய ஏற்பாட்டின் கீழ் இருந்த ஆசாரியர்கள், அவர்கள் ஆசாரியத்துவத்துக்கு வரும்போது அவர்களும் அந்த அசலான மன்னாவை புசிப்பார்கள் என்று அறிந்திருந்தார்கள். பார்ப்பதற்கு மன்னாவை போல இருக்கும் ஒன்றையோ அல்லது மனிதனால் செய்யப்பட்ட ஒன்றையோ அல்ல அந்த அசலானவற்றிலிருந்தே அவர்கள் பெறப் போகிறார்கள். நிச்சயமாகவே அந்த பெந்தெகொஸ்தே நாளிலே நம்முடைய மன்னா விழுந்த போது, முழக்கமிடும் பலத்த காற்றாக பரிசுத்தாவியானவர் வந்தார். இங்கே கண்ணியமான ஒரு கூட்ட மக்கள், நூற்றிறுபது பேர், மேல்வீட்டு அறையில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டு வாக்குத்தத்துக்காக காத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஆம் நிச்சயமாக அவர்கள் இயேசுவுடன் இருந்தவர்கள். அவருடைய வல்லமையையும் மற்றும் எல்லாவற்றையும் அறிந்தவர்கள், ஆனாலும் அவர்கள் வாக்குத்தத்தத்துக்காக காத்திருந்தார்கள். இந்த இரவுப் பொழுதில் அதுதான் நமக்குத் தேவையாக இருக்கிறது. இந்தச் சிறு கூட்ட மக்களும் அந்த இரவுப்பொழுதில் இருந்தது போல் ஏக சிந்தனையோடு, இருப்பார்கள் என்றால் கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் இருக்கும் இந்த கட்டிடத்திலும் பெந்தெகொஸ்தேயின் நாளில் நடந்தது போலவே நடக்கும். அது சரிதான். அன்றைக்கு அங்கிருந்த குறை கூறுபவர்கள் போலேயே இங்கே லூயிவில்லிலும் குறை கூறுபவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஏக சிந்தையோடு ஒரே இடத்தில் இருந்தார்கள். 45அவர்களிடம் அங்கே ஒரு ஊழியக்காரர் வந்து ஒரு கடிதத்தில் அவர்கள் பெயர்களையெல்லாம் எழுதினவுடனேயே... அவர்கள் சபை அங்கத்தினர்கள் ஆகிவிட்டார்களா? அது வேண்டுமானால் இன்றைக்கு இருக்கும் நிலமையாக இருக்கலாம், ஆனால் அன்றைக்கு அப்படி செய்ய முடியாது. அவ்வாறுதான் பிராடஸ்டன்டுகள் செய்கிறார்கள். ஒரு கத்தோலிக்கன் பலிபீடத்தண்டை நடந்து சென்று தன் நாக்கை நீட்டி அப்பத்தை பெற்று, ஆசாரியனிடமிருந்து திராட்சை மதுவை வாங்கி பருகினவுடன் அவன் கத்தோலிக்கன் ஆகிவிடுகிறான். ஆனால் சகோதரனே பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் ஏகசிந்தையோட ஒரே இடத்தில் இருந்தார்கள். அப்பொழுது சடுதியாக பரத்தில் இருந்து ஒரு சத்தம் வந்தது, ஒரு பலத்த காற்றைப் போல வந்து அவர்கள் அமர்ந்து இருந்த அந்த வீடு முழுவதையும் நிரப்பியது. அது ஒரு மனிதால் செய்யப்பட்ட காரியம் அல்லவே. தேவனின் வல்லமை அவர்களைத் தொட்டது. பித்துப் பிடித்தவர்கள் போல் வீதியில் சென்றார்கள். சிவந்த சமுத்திரத்தின் ஊடாக அவர்கள் சென்றபோதும் அப்படியே செய்தார்கள். அது சரிதானே? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர்). அவர்கள் உறக்கக் கத்திக் கொண்டே போனார்கள், தடுமாறினார்கள், திக்குவாயுடன் பேசினார்கள். ''இவர்கள் புதிய திராட்சை மது அருந்தியிருக்கிறார்கள்“ என்று மேம்பட்ட சபையோர்களும் மக்களும் அவர்களைப் பார்த்துச் சொல்லும் வரை அவர்கள் அப்படியாக தடுமாற்றத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அல்லேலூயா‚ நீங்கள் எப்படியிருந்தாலும் என்னை ''பரிசுத்தஉருளை“ என்று தான் அழைக்கப் போகிறீர்கள். ஆகையால் அதை இப்பொழுதிலிருந்தே ஆரம்பியுங்கள். சரி இருக்கட்டும். 46கவனியுங்கள், அவர்கள் புது மதுவால் நிரப்பப்பட்டிருந்தார்கள். அது பரத்திலிருந்து தேவனிடமிருந்து வந்தது. எப்பொழுதாவது குடிக்காரனை பார்த்திருக்கிறீர்களா? அவன் எல்லோரையும் நேசிப்பான், இல்லையா. அவனுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. அதேப்போலவே ஆவியில் குடித்து போதையில் இருக்கும் மனிதனும் இருப்பான். ''மதுபானத்தினால் வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து இருங்கள்“ என்று வேதாகமம் சொல்லுகிறது. நீங்கள் உங்களுடைய எதிரிகளையோ அல்லது வேறு எந்த காரியமானலும் சரி, அதை மறக்கும் அளவிற்கு தேவனுடைய ஆவியானவர் உன்னை போதைக்குள்ளாக்குகிறார். எல்லோரும் உங்களை நேசிப்பார்கள். உங்களைச் சுற்றிலும் யார் நிற்கிறார்கள் என்று நீங்கள் அக்கறை கொள்வதில்லை. அந்நிலையில் நீங்கள் தான் தேசத்தில் இருப்பதிலேயே மிகப் முக்கியமான நபரை போல உணருவீர்கள். உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் எப்பேற்பட்ட கண்ணியமான சபைக்கு செல்பவராக இருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை ஒரு முறை பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வரட்டும் அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். நீங்கள் உங்களை நன்றாக சரி செய்துக் கொள்ளுங்கள். முழுமையாக குடியுங்கள், அப்பொழுது என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உடனே நீங்கள், ''சகோதரியே, நான் பெற்றுக் கொண்டேன் உங்களுக்கும் கூட வேண்டுமா?“ என்று சொல்லுவீர்கள். அது சரிதான். ஆம் ஐயா, ஏதோ ஒரு காரியம் நடக்கும். 47அங்கேயும் அவர்கள் அப்படிதான் புதிய திராட்சை மதுவினால் நிரம்பி போதையில் இருந்தார்கள். இங்கிருக்கும் சில சகோதரிகளே நீங்களும் கேளுங்கள், புனித மரியாளும் அதில் ஒரு நபர் என்பதை நீங்கள் அறிவீர்களா? இப்பொழுது அவர்களும் அங்கே போயாகத்தான் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் தாயும் கூட அந்த கூட்ட மக்களோடே சேர வேண்டியது அவசியமாயிருந்தது. அவர்களும் கூட ஆவியில் நிரம்பி போதையானதால் விஸ்கியோ அல்லது வேறு பொருட்களினால் போதையாகி தடுமாறுவது போல தடுமாறினார்கள். ஆனால் நீ ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மணி அடிக்கும்போது அக்குளில் பாட்டு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு சபைக்கு சென்று அங்கு ஏதோ ஒன்றை கேட்டுவிட்டு பரலோகத்திற்கு சென்றுவிடலாம் என்று நினைக்கின்றாயா? அது ஒருக்காலும் நடக்காது. நீங்கள் அந்த வழியில்தான் வந்தாக வேண்டும். ஏனென்றால் தேவன் அந்த ஒரு வழியைத்தான் நியமித்தார். மற்றும் இதுவரைக்கும் வேறு வழி எதுவும் இல்லை. நீங்கள் அதில் செல்லவில்லை என்றால் அங்கே சென்றடையமாட்டீர்கள். நான் உங்கள் நியாயாதிபதி அல்ல, நான் சுவிசேஷகத்தை மட்டுமே பிரசங்கிக்கிறேன். அதுதான் உண்மை. புனித கன்னிதாய் அங்கே தான் இருந்தார்கள். அவர்களும் மற்றவர்களை போல புத்தி பேதலித்தது போலவே இருந்தார்கள். மற்றவர்கள் எப்படி போதையில் இருந்தார்களோ அதேப்போல் இவர்களும் இருந்தார்கள். இதோ அங்கிருந்த புருஷர்களும் ஸ்திரீகளும், மற்றும் எல்லோரும் புது திராட்சை ரசத்தினால் நிரம்பியிருந்தார்கள். தேவன் ஒருமுறையாவது தன்னுடைய வழக்கத்தை மாற்றியிருக்கிறார் என்று எனக்கு வேதாகமத்தில் காண்பியுங்கள். அப்படி ஒன்று இல்லையே. காலத்தின் முடிவு பரியந்தம், வேதாகமத்தின் முடிவு மட்டும் ஒரே மாதிரிதான் நடந்திருக்கிறது. இயேசு வரும் பொழுதும் அதே மாதிரிதான் இருக்கும். அவர்கள் அன்று புது திராட்சை ரசத்தினால் குடித்திருந்தார்களோ; இப்பொழுது தேவன் அதை ஒரு ஓமர் அளவு எடுத்து வைத்திருக்கிறாரா என்று பார்ப்போம். சரி. 48இப்பொழுது அங்கே அவர்கள் எல்லோரும் ஒன்றாக நின்றுக் கொண்டிருந்தார்கள். அங்கே ''சிறிய கன்மலை“ என்றுஅழைக்கப்பட்ட வயதான கோழையான பிரசங்கியாகிய பேதுரு இருந்தான். அவன்தானே தன்னுடைய ஸ்தானத்தை குறித்து இயேசுவை மறுதலிக்கும் அளவிற்கு பயந்திருந்தான். அவனும் அவர்களோடே சேர்ந்திருக்க வேண்டியிருந்தது. ஒரு சோப்பு பெட்டியை போன்று ஒன்றின் மேலே ஏறி நின்றுக் கொண்டு, டாக்டர் பட்டவர்கள் மற்றும் டி.டி பட்டங்களை பார்த்து, ''யூதேயாவிலுள்ள புருஷர்களே மற்றும் எருசலேமில் தரித்திருப்பவர்களே, இஸ்ரவேலின் புருஷர்களே மற்றும் எருசலேமில் வசிப்பவர்களே, நீங்கள் எல்லோரும் ஒரு காரியத்தை அறிந்துக் கொள்ளுங்கள், இது மூன்றாம் மணிநேரமாய் இருப்பதால் நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிபோதையில் இல்லை. ஆனால் இது என்ன காரியம் என்றால்... அப்படி இது அந்தக் காரியமாக இல்லையென்றால், அது வரும்வரைக்கும் இதை நான் காத்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த ஒன்றை. இது யோவேல் தீர்க்கதரிசி, ''நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். வானத்திலும் பூமியிலும் பனி அக்கினி புகை ஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்“ என்று தீர்க்கதரிசனமாய் சொன்னது என்று சொன்னான். 49அந்த நீண்ட அங்கியை அணிந்திருந்த மாயமாலமான தங்களை தாங்களே ஆசாரியர்களாய் மாற்றிக் கொண்ட அந்த கூட்டத்தினர்கள் அவரை பார்த்து, ''இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?“ என்று கேட்டனர். அதற்கு பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்“ என்றான். எவ்வளவு காலம் ஆகும்? ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது”. பிறகு மனந்திரும்பி மற்றும் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறார். இப்பொழுது அவனுக்கு அந்த மன்னா முதலாவதாக கிடைத்ததே அது போல இல்லை. அவனுக்கு முதலாவதாக வந்த அந்த மன்னா அவனுடைய வாய் திருப்தியாகுமளவுக்கு கிடைப்பதோடு அதே பரிசுத்த ஆவி அவன் இருதயம் நிரம்புமளவுக்கு கிடைக்கிறது. 50''அந்த காரியங்களைப் பற்றி பேசுவதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்“ என்று நீங்கள் கூறலாம். நான் அதைப்பற்றி அதிகமாக பேசுகிறேன் என்று அறிந்திருந்தாலும் என்னால் அதைப்பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. இப்பொழுது கவனியுங்கள், இங்கே பாருங்கள். நான் உங்களை பார்த்து கத்தவில்லை. பார்ப்பதற்கு நான் கத்துவதை போலிருக்கலாம். ஆனாலும் நான் உணருவதை நீங்களும் உணருவீர்களென்றால், நீங்களும் அப்படிதான் கத்துவீர்கள். 51ஓ, இப்பொழுது கவனியுங்கள், ஆதியிலே திருப்தியளிக்கத் தக்கதாக அந்த அசலான மன்னா விழுந்தது அன்று விழுந்த அதே பரிசுத்த ஆவியனவர் இப்பொழுதும் விழுகிறார். இப்பொழுது அது யாரிடம் செல்லும்? ''உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் மற்றும் தூரமாக இருக்கும் யாவருக்கும்“, லூயிவில், கென்டக்கியில் இருப்பவர்களுக்கு மற்றும் ''யாரையெல்லாம் தேவனாகிய கர்த்தர் அழைக்கிறாரோ, அவர்களெல்லோரும் நாம் எதை பெற்றிருக்கிறோமோ அதையே அவர்களும் பெறுவார்கள்”. அதைத் தான் அவர் சொன்னார். தேவன் அதை ஆசீர்வதித்தார். அவர் அதை பிரசங்கித்தார். பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வந்தார் மற்றும் நான் அதைப் பெற்றுக் கொண்டேன் அவ்வளவுதான், முடிந்தது. ஆமென். எனக்கு அதுவே போதுமானது. நான் அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டேன் அவர் அதை நிறைவேற்றினார். உங்களுக்கு அது வேண்டுமென்றால் நீங்களும் கூட அதை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம். 52ஆகவே மரித்த நிலையிலிருந்து வெளியே வா, விழித்துக் கொள். அப்படி இப்படி உன்னை உலுக்கிக் கொண்டு விழித்திடு. முதலாவதாக, உங்களுக்கு எல்லாமுமே வித்தியாசமாக தோன்றும். நீங்கள் எந்த நபரிடம் பேசாமல் இருந்தீர்களோ அவரை பார்த்தவுடன் விரைந்து சென்று அவரிடம் பேசுவீர்கள் அவரிடம் பேசித்தான் ஆகவேண்டும். அவ்வளவுதான். நீங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுத்த பொருட்களை திரும்ப கொடுத்துவிடுவீர்கள். அதேப்போல் முந்தி எடுத்த, அந்த டயர் சரி செய்ய பயன்படுத்திய கருவிகளையும் திரும்ப அளித்துவிடுவீர்கள். ஓட்டல்களிலிருந்து நீங்கள் எடுத்து வந்த பொருட்களை திரும்பி கொடுத்துவிடுவீர்கள். அந்த பழைய துணிக்குள்ளாக வைத்து எடுத்து வந்த வெள்ளி பொருட்களை திரும்பி கொடுப்பதற்கு விரைந்து செல்வீர்கள். நிச்சயமாய் அப்படி செய்வீர்கள். ஆம் ஐயா. கிறிஸ்து இயேசுவிற்குள் புது சிருஷ்டியாய் நீங்கள் மாற்றப்படுவீர்கள். இப்பொழுது மரியாளை பாருங்கள். ஓ, என்னே! நாம் நிச்சயமாய் வேகமாக செல்ல வேண்டும். இன்னும் சற்று நேரம் தான் இருக்கிறது. 53இதோ அவர்கள் அந்த பண்டைய பாணியிலான கூட்டம் முடிந்ததும் வனாந்திரத்தின் ஊடாக பிரயாணமாக கடந்து செல்கிறார்கள். அவர்கள் அந்த பாவத்தின் வனாந்திரத்திற்குள்ளாக, வனாந்திரத்திற்குள்ளாகவே, அந்த கசப்பான நீரூற்றண்டைக்கு அழைத்து செல்லப்பட்டது பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது அல்லவா? தேவன் தம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவுடனேயே அந்த கசப்பான நீரூற்றண்டைக்கு அவர்களை அழைத்து சென்றார். அதை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? நிச்சயமாகவே அவர் தன்னுடைய அன்பை மீண்டுமாக வெளிப்படுத்த விரும்புகிறார். அது உண்மைதான். அவர்கள் அவ்விடம் அடைந்தனர். உங்களுக்கு தெரியுமா, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு அநேக தடைகள் வரும் என்று?. ''நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்“. தேவன் அவருடைய வல்லமையையும் மற்றும் அவருடைய நற்குணத்தையும் காண்பிக்கும் பொருட்டு அவரே சரியாக அதனை எதிர்கொள்கிறார். 54நான் எருசலேமிலிருந்த ஒரு மேய்ப்பனை பற்றிய கதையை கேட்டேன். அவன் தன்னிடமிருந்த ஒரு ஆட்டுக்குட்டியின் காலை உடைத்துப் போட்டான். அதை கண்டு, ''நீ எப்பேற்பட்ட கொடுமையான மேய்ப்பன். அந்த ஆட்டுக்குட்டியின் காலை ஏன் உடைத்தாய்?“ என்று கேட்டனர். அதற்கு அவன், ''அந்த ஆட்டுக்குட்டி என்னிடம் பாசமாகவே இருக்காது. ஆகையால் அதன் காலை உடைத்து அதற்கு கொஞ்சம் அதிகமான கவனிப்பளித்தால் அது அப்பொழுது என்னை நேசிக்க ஆரம்பித்துவிடும் என்று எண்ணினேன்“ என்றான். அதேப்போல், நீங்கள் மரிக்க போகிறீர்கள் என்று மருத்துவர்கள் சொல்லும் அளவிற்கு தேவனும் சில நேரங்களில் உங்களை நோயினால் விழ செய்ய வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் அவரை நேசிக்கும் பொருட்டு அந்நேரம் அவர் உங்களை பிரத்தியேகமாக கவனிப்பார். அது சரிதான். சிலர் தண்ணீரின் ஊடாக, சிலர் காற்றாற்றின் ஊடாக சிலர் கடும் சோதனையினூடாக, ஆனால் எல்லோரும் இரத்தத் தினூடாக இயேசு தன்னுடைய சபையை வழி நடத்துகிறார். 55அவர்கள் வந்தபோது அவர்களால் அந்த தண்ணீரை குடிக்க முடியவில்லை. அப்பொழுது தேவன் அவர்களுக்கு ஒரு வழியை உண்டு பண்ணினார். அங்கே ஒரு பழைய மரம் அப்படியாய் ஆடிக் கொண்டிருந்தது. மோசே அதை வெட்டி எடுத்து அந்தத் தண்ணீரில் போட்டான். நிலமை மாறிப்போனது; தண்ணீர் நல்ல இனிப்பாக மாறிப்போனது. இப்பொழுது நீங்கள் உங்களுடைய ஒரு கசப்பான தண்ணீரண்டைக்கு வரும்பொழுது, அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றினருகே வரும்பொழுது, இன்றிரவு ஆவிக்குரிய பிரகாரமாக ஒரு மரம் இருக்கிறது. அது கொல்கொதா மீது இருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கிற அந்த மரம் நீங்கள் கடந்திடும் எந்த கசப்பான தண்ணீரையும் நிச்சயமாக இனிப்பாக மாற்றும். எந்தவொரு அனுபவத்தையும் கல்வாரி இனிப்பாக மாற்றும். அநேக நேரங்களில் நாம் கடினமான சூழ்நிலைக்குள்ளாக சென்று அது எப்படி நேர்ந்தது என்று வியக்கிறோம். ஆகவே சில நேரங்களில் நான் என் கண்களை மூடிக்கொண்டு, ''அதோ அந்த கொல்கொதாவில், என் மீட்பர் இரத்தம் சிந்தி என்னுடைய ஜீவனுக்காக மரித்தார்“ என்று நினைப்பேன். அப்பொழுது என்னுடைய சோதனைகள் எல்லாம் மிக சிறியதாகவே தோன்றும். நான் அதை தூக்கிபோட்டு விட்டு கடந்து செல்வேன். அவற்றை அது இனிமையாக மாற்றிவிடுகிறது. அது என்னுடைய எல்லா அனுபவங்களையும் இனிமையாக மாற்றிவிடுகிறது. நான் எப்பொழுதெல்லாம் என்னுடைய மாராவின் தண்ணீரண்டை வருகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர் அதை இனிமையாக மாற்றிவிடுகிறார். 56இப்பொழுது அந்த வனாந்திரத்தில் இருக்கும் அவர்களை நாம் பார்க்க போகிறோம். அற்புதங்களும் அடையாளங்களும் நிகழ்ந்தாயிற்று. எழுப்புதல் எல்லாம் அனைய ஆரம்பித்துவிட்டது. எழுப்புதல் எல்லாம் தணிந்த போது முதலாவதாக அவர்களுக்கு எல்லா அற்புதங்களும் மறந்து போயிற்று. அது இன்றைக்கு இருக்கும் மக்களுக்கு ஒப்பனையாக இருக்கிறது அல்லவா? தேவன் அவர்களுக்கு முந்தின வருடத்தில் என்ன செய்தார் என்பதையே மறந்துவிடுகிறார்கள். பாருங்கள், இந்த உயர்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்தில் தேவன் செய்த எல்லாவற்றையும் நீங்கள் மறுந்துவிடுகிறீர்கள். தேவன் செய்த யாவற்றையும் நாம் அப்படியே மறந்துவிடுகிறோம். 57இப்பொழுது கவனியுங்கள், அவர்களோ ஒருவரோடொருவர், ''நான் ஒரு மெத்தடிஸ்ட், எங்களுடைய சபைதான் பெரியது என்றும், நான் பாப்டிஸ்ட், நாங்கள் நித்தியமான பாதுகாப்பை விசுவாசிப்பதோடு அதை பெறவும் செய்திருக்கிறோம், ஆனால் உங்களிடம் அந்த கோட்பாடே கிடையாது“ என்று தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் தான் நீங்கள் பிரச்சனையில் சிக்குகிறீர்கள். உங்கள் தண்ணீரும் வற்றிப்போகிறது. அது மிக மிக சரியே. இதோ இப்பொழுது அவன் அந்த வனாந்திரத்திலே வசிக்கும்போது தான் முறுமுறுக்கவும் புகார் செய்யவும் ஆரம்பித்தான். ''நல்லது, நான் ஒன்று சொல்கிறேன், அந்த பண்டைய காலத்து மார்க்கத்தை பற்றி பிரசங்கித்த அந்த வயதான போதகரும் பிரசங்கியானவருமானவர் சரியா தவறா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், ஓர் இரவிலே இவரால் என் தாய் மிகவும் கோபப்பட்டு வீட்டிற்கு சென்றார். அவர்கள் மிகவும் கோபமாயிருந்தார்கள் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்“. அவர் அப்படிதான் கண்டிப்பாக கோபமாக இருந்திருக்க வேண்டும். அது சரிதான். ''எனக்கு இனிமேலும் அதைகேட்க விருப்பமில்லை” என்றாள். இங்குதான் உங்களுடைய தண்ணீர் நிறுத்தப்படுகிறது. அது சரிதான். இங்குதான் நீங்கள் வனாந்திரத்தில் நுழைகிறீர்கள். 58அவர்களோ முறுமுறுக்க துவங்கினார்கள். அவர்கள், ''எங்கள் ஆத்துமா இந்த மெல்லிய அப்பத்தை வெறுக்கிறது“ என்றார்கள். அவர்கள் எகிப்தின் பூண்டுகளையும் மற்றும் வெங்காயத்தையும் விட்டு தேவ தூதர்களின் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், ஆயினும் குறை சொன்னார்கள். அது சபையைப் போல இருக்கிறது அல்லவா? நான் இங்கிருக்கும் ஹோலினஸ் சபையை சார்ந்த மக்களை பற்றிதான் பேசுகிறேன், ஆம் உங்களெல்லாரையும் பற்றிதான் கூறுகிறேன். நீங்கள் தேவ தூதர்களின் உணவை சாப்பிட்ட பிறகும் மீண்டும் எகிப்திற்கு சென்று கொஞ்சம் கூட பூண்டை எடுத்தால் நலமாயிருக்குமே” என்கிறீர்கள். ''கிளேட்டன் மெக்மிச்சேன் மற்றும் அவனுடைய வைல்ட் கேட்ஸ் (Wildcats) இன்றிரவு மது விடுதிக்கு வரப் போகிறார்கள். இந்த பழமையான சபையில் நான் சேரவில்லையென்றால் அங்கு சென்றிருக்கலாம்“ என்று நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் அங்கேயே சென்றிருக்கலாம். எங்கே உங்கள் பொக்கிஷங்கள் இருக்கிறதோ அங்கேயே உங்கள் இருதயமும் இருக்கும். நீ துவங்கும் போதே உன்னிடம் எதுவும் இல்லை. அது சரிதான். அது சரிதான். ''ஓ, நான் இதை செய்ய விரும்புகிறேன் அல்லது அதை செய்ய விரும்புகிறேன்”, பார்த்தீர்களா. எப்பொழுதுமே குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாய். 59எகிப்தில் இருக்கும் சேற்றுத் தண்ணீரை விட்டு காலங்களின் ஊடாக இருக்கும் அந்த கன்மலையின் சுத்தமான தண்ணீரைக் குடிக்கச் சென்றும் அதையே குறைக் கூறினார்கள். அவர்கள் அந்த மகத்தான மருத்துவரிடம் இருப்பதற்காக, மிகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எகிப்திலுள்ள அந்த மகத்தான மருத்துவர்களின் இடத்தை விட்டு கடந்து சென்றனர். அற்புதங்களும் அடையாளங்களும் பின் தொடரும் அந்த மக்களோடு இருப்பதற்காக, ''அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டது“ என்று கூறிடும் மக்களைவிட்டு வந்த பின்னரும் அவர்கள் குறைக்கூறிக் கொண்டே இருந்தனர். அவர்கள் விட்டுவந்த புறஜாதியான எகிப்தியர்கள் நிச்சயமாகவே உணர்ச்சியற்றவர்களும் அலட்சியமானவர்களுமாம். அவர்களுக்கு அற்புதங்கள் என்பவற்றிளெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் இங்கேயோ அவர்களை சுற்றி அக்கினி ஸ்தம்பம் இருந்தது. இன்றைக்கும் இவ்விரவிலே அது நம்மிடமும் இருக்கிறது. அவர்கள் இருந்த கூடாரத்திலே சந்தோஷம் இருந்தது, ஆரவாரம் இருந்தது, அற்புதங்கள் நிறைவேறியது, மற்றும் எல்லாமே இருந்தது. ஆனாலும் அவர்கள் குறைகூறிக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் தண்ணீர் வற்றிபோனது. அவர்கள் முறுமுறுத்ததினாலே அவர்களுக்கு புசிப்பதற்கோ குடிப்பதற்கோ ஒன்றும் இல்லாமல் போயிற்று. மேலும் இன்றிரவு அதுதான் லூயிவில்லில் இருக்கும் சபைகளிலும் பிரச்சனையாக இருக்கிறது. முறுமுறுப்பும் குறைகூறுவதும். இரக்கம் வேண்டும்! சேனைக்குள் திரும்ப வாருங்கள். ஆம் ஐயா. ''யார் இந்த மோசே? நாம் ஏன் அவருக்கு செவி கொடுத்தோம். இந்த பரிசுத்த உருளை பிரசங்கிக்கு எதற்கு செவிகொடுக்க வேண்டும்? நாம் இங்கே என்ன செய்துக் கொண்டுஇருக்கிறோம்?“ என்றனர். உடனே அவர்கள் தண்ணீர் வரத்து நின்று போயிற்று. 60அந்த மகத்தான மனிதன் மோசேயை குறித்து நான் நினைத்து பார்க்கிறேன். எகிப்தின் எல்லா ஞானத்திலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். அவனைக் குறித்து சில நிமிடங்கள் பார்க்கலாம். மோசேயை குறித்து ஒரு நிமிடம் பார்க்கலாம். அந்த மனிதனைப் பாருங்கள். அவன்... எகிப்தியர்கள் நம்மை காட்டிலும் மருத்துவ அறிவியலில் மிகவும் மேம்பட்டவர்கள். நம்மால் தொடக்கூடாத அளவிற்கு உயர்ந்திருந்தார்கள். அவர்களால் முடிந்த பல காரியங்களை நம்மால் இன்று செய்ய முடியாது. மேலும் மோசேயிடம் எல்லாவற்றிர்க்கும் நிவாரணங்கள் இருந்தது. சிந்தித்து பாருங்கள், அவனோடு கூட இருபது லட்சம் மக்கள் இருந்தார்கள். அதில் சிறு பிள்ளைகள் இருந்தார்கள், வயதான ஆண்களும் பெண்களும் இருந்தார்கள், முடவர்கள் மற்றும் குருடர்களும் இருந்தார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒரே வாரத்தில் பிறந்தன. அங்கேதானே மோசே, மருத்துவர் மோசே, வனாந்திரத்தில் இந்த மக்கள் எல்லோருடனும் இருந்தார். அவனுடைய மருந்து பெட்டியை நான் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் பார்க்க விரும்புவீர்கள் அல்லவா? மருத்துவர் மோசேயின் மருந்து பெட்டியில் அவன் என்ன வைத்துள்ளான் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். சற்று அந்த மருந்து பெட்டிக்குள் அவன் என்ன வைத்திருந்தான் என்பதை எட்டி பார்ப்போம். 61''மோசே, அதில் நீ என்ன வைத்திருக்கிறாய் மோசே?“ ஏனென்றால் அந்த நாற்பது வருட பிரயாணத்தில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தார்கள் என்று நாம் பார்த்தோம். அது சரிதான். ''நீ என்ன உபயோகித்தாய் மோசே? அந்த காயங்களுக்கும், வலிகளுக்கும், மற்றும் கேன்ஸர் நோய்க்கும் குருட்டுத்தனத்திற்கும், செவிடருக்கும் மற்றும் ஊமையருக்கும் என்ன உபயோகித்தாய்? ஏனென்றால் அந்த வனாந்திரத்தை விட்டு வெளியே வரும்பொழுது அதில் ஒருவர் கூட பெலவீனமானவர்கள் இல்லை என்று சொல்கிறார்களே”. அந்த மருந்து பெட்டிக்குள் என்ன இருந்தது என்று இங்கிருக்கும் சில மருத்துவர்கள் அதை பார்க்க விரும்ப மாட்டார்களா? ''மற்றும் இன்னொரு விஷயம், மோசே அந்த மக்கள் மீது என்ன தெளித்தாய்? அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவே இல்லையே? அந்த கற்பாறைகளின் மேலே நடந்த பிறகும் அவர்கள் செருப்பு தேய்ந்து போகவில்லையே“. நீங்கள் எப்பொழுதாவது பாலைவனம் சென்றிருந்தீர்கள் என்றால் அது எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். மூன்றே நாளில் உங்கள் பாதரட்சைகள் தேயந்துவிடும். ஆனால் நாற்பது வருடங்களாய் அவர்கள் பாதரட்சைகள் ஒரு துளியும் தேய்ந்து போகவில்லை. ''மோசே, உன்னுடைய மருந்து பெட்டிக்குள் என்ன வைத்திருந்தாய்?” 62சரி அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். என்னால் அவனை பார்க்க முடிகிறது. ஒரே ஒரு மருந்து சீட்டு மட்டுமே இருக்கிறது, ''நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்“. அது போதும். ஆமென். ''ஓ, மோசே என் தகப்பனார் அங்கே சென்றிருந்த போது விழுந்து அவர் காலை உடைத்துக் கொண்டார் அவருக்கு என்ன வைத்திருக்கிறீர்?“ என்றார்கள். அதற்கு அவன், ''நான் பார்த்து சொல்கிறேன், நீ அவனிடத்தில் சென்று, ''நீ என் சத்தத்திற்கு கீழ்படிந்து, என் எல்லாக் கட்டளைகளையும் செய்தால் நான் எகிப்தியருக்கு வரப் பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். ''நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்“ என்றான். அவன் சுகமடைந்தான். ஆமென். அது சரிதான். ''ஓ, என் பிள்ளை மிகவும் வியாதியாக இருக்கிறான். அவனுக்கு காலிக் அல்லது நிமோனியா இருக்கிறது, மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவர் மோசே அவர்களே, நான் என்ன செய்யட்டும்?“ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ''என்னிடத்தில் என்ன இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்“. ''நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்”. அதுபோதும். ஆமென். அவர்கள் சென்றுவிட்டார்கள். அது சரிதான். களிகூர்ந்துக் கொண்டே சென்றார்கள். ''நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்“ என்பது மட்டும்தான் அவனுக்கு தேவையாக இருந்தது: 63புதிய ஏற்பாட்டில் மட்டும் தெய்வீக சுகமளித்தளுக்காக நிச்சயிக்கப்பட்ட அறுநூற்றுக்கும் மேற்பட்ட வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் நாம் இன்றைக்கு தேவனை இவ்விரவிலே கேள்வி கேட்கிறோம். நமக்கு எப்பேற்பட்ட நியாயத்தீர்ப்பு இருக்குமோ? அது நிச்சயம். 64''நானேஉன் பரிகாரியாகிய கர்த்தர்“. ஆம் ஐயா. அது தான் மோசேயிடம் இருந்தது. மருத்துவர் மோசேயினுடைய மருந்து பெட்டிக்குள் இருந்தது, ''நானே உந்தன் பரிகாரியாகிய கர்த்தர்” என்பதுதான். ஆகவே அவர் அவர்களுடைய எல்லா நோய்களையும் குணமாக்கினார். அவர்களை பத்திரமாக வைத்திருந்து அந்த வனாந்திரத்தினூடாய் வாக்குதத்த பூமிக்கு அழைத்து வந்தார். ஓ, என்னே! அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த அந்த பெரிய மருத்துவர்கள் எல்லோரையும் விட்டு அந்த மகத்தான வைத்தியரோடு இருக்கும்படி சென்றனர். ''அற்புதங்கள் என்ற ஒன்று இல்லை“ என்று கூறும் குளிர்ந்து போன, அலட்சியமான, சம்பிரதாயமான மக்களையெல்லாம் விட்டு விலகி சென்றார்கள். இங்கேயோ ஒரு அக்கினிஸ்தம்பம் அவர்கள் மேலாக நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் சுகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவை எதுவாக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்படியிருந்தும் தண்ணீர் வற்றினதும் அவர்கள் முறுமுறுக்க துவங்கினர். ஆனாலும் அவையெல்லாம் நடைப்பெறும்போது, தேவனுடைய ஏகாதிபத்திய கிருபையினால்… 65''அற்புதங்கள் நாட்கள் முடிந்தது“ என்றெல்லாம் கூச்சலிடும் லூயிவில்லின் மத்தியில் இன்று இரவுப்பொழுது நீங்கள் இருப்பதைப் போல் தேசம் முழுவதும் தெய்வீக சுகத்தை மருத்துவ துறையாளர்கள் நிறுத்த முயற்சிக்கிறார்கள். அதை ஒருபோதும் உங்களால் நிறுத்தமுடியாது. அப்படி முயற்சிப்பதை நீங்கள் இப்பொழுதே நிறுத்திவிடுங்கள். மேலும் சூரியனை எப்படி உங்களால் நிறுத்த முடியாதோ அதேபோல் இதையும் உங்களால் நிறுத்தமுடியாது. அது சரிதான். சில வருடங்களுக்கு முன்பதாக இங்கே நான் ஜெபர்சன்வில்லில் முதன் முதலில் துவங்கின போது தெய்வீக சுகத்தைப் பிரசங்கித்தேன். அதன் செயல்பாடு பல வருடங்களாக நடைமுறையில் இல்லாமலிருந்ததால் சற்று கடினமாக இருந்தது. ஆனால் சகோதரனே, இந்த இரவுப்பொழுதில் லட்சக்கணக்கான மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் கூக்குரலிடுகிறார்கள். அதை நிறுத்திவிடுவீர்களா? நிச்சயமாக உங்களால் முடியாது. ''கர்த்தராகிய நான் அதை நட்டேன். நான் அதற்கு இரவும் பகலும் தண்ணீர் பாய்ச்சுவேன். கர்த்தராகிய நான், என் கரத்திலிருந்து ஒருவரும் அதைப் பறித்துக் கொண்டு போகாதபடிக்கு அதைக் காத்துக் கொள்வேன்.“ 66கொஞ்சம் காலத்திற்கு முன்பதாக சுதந்திர தேவியின் சிலையின்மேல் விழுந்து கிடந்த சில சிறு குருவிகளை கவனித்தேன். அவைகள் அங்கே அப்படியே அந்த விளக்கை சுற்றிலும் கிடந்தன. நான் அங்கிருந்த வழிகாட்டியை பார்த்து, ''அங்கே என்ன நடந்தது?“ என்று கேட்டேன். அதற்கு அவன், ''நேற்று இரவு கடும் புயல் அடித்தது. அப்பொழுது அவைகள் எல்லாம் அந்த வெளிச்சத்திற்கு நேராக சென்று மோதின. அந்த வெளிச்சத்தைக் கொண்டு அவைகள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருக்கலாம். ஆனால் அந்த குருவிகள் அந்த வெளிச்சத்தை அணைத்துப்போட முயற்சித்தது. அதில் அதன் தலைகள் உடைந்தது“ என்றான். நான் உடனே, ''தேவனுக்கு மகிமை“ என்றேன். என்னை ஒரு பைத்தியம் என்று அவர் எண்ணியிருப்பார் என்று நான் யூகிக்கிறேன். நான், ''இந்த சம்பவம் தெய்வீக சுகமளித்தலையும் மற்றும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழும் வல்லமையையும் இல்லையென்று தாக்குகின்ற சில மக்களை என் எண்ணத்திற்கு கொண்டு வருகிறது” என்றேன். நீங்கள் உங்கள் தலையை உடைத்துக் கொள்வீர்களே தவிர அதை உங்களால் நிறுத்தவே முடியாது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தரும் பாதுகாப்புக்குச் சென்றுவிடுங்கள். அது சரிதான். ஆமென். 67''மோசே, அந்த கன்மலையிடத்தில் பேசு“ என்று தேவன் மோசேயிடம் சொன்னார், ''அப்பொழுது அது அதன் தண்ணீரைக் கொண்டு வரும், அவருடைய தண்ணீரை அது கொண்டு வரும்” கொஞ்ச நாட்களுக்கு முன்பதாக ஒரு அருங்காட்சியகத்தில் அடிக்கப்பட்ட கன்மலையை சித்தரிக்கும் ஒரு காட்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு ஊசியின் அளவிற்கு அந்த நீரூற்றானது வந்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அதைப் பார்த்து நான், ''இந்த ஓவியர்கள் இவ்வளவு புத்தி இல்லாமல் இருப்பார்களா?“ என்று எண்ணினேன். சகோதரனே, தாகமாயிருக்கும் போது அதிலிருந்து குடித்திருப்பேனானால் நானே அதை முழுவதும் குடித்து முடித்திருப்பேனே. நிச்சயமாக ஐயா‚ அந்த கன்மலையிலிருந்து எத்தனை பேருக்கு மோசே தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?மிருகங்களை தவிர இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் குடிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு நாற்பதாயிரம் கேலன் தண்ணீர் தேவைப்பட்டது. அல்லேலூயா‚ 68இது இப்பொழுது எனக்கு மக்களுடைய பக்தியை பற்றி நினைப்பூட்டுகிறது. உங்களிடம் வெறுமனே ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு பள்ளிக்கு சென்று சற்று நனைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மட்டுமே பக்தி இருக்கிறது. நானோ நீரூற்று பீறிட்டு அடிக்கும் இடத்தில் உட்கார்ந்து நித்தியத்திற்கு கடந்து செல்லும் அளவிற்கு போதுமானதை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். அல்லேலூயா! அந்த பழைய ஈரமான இடத்தை விட்டு விட்டு எப்பொழுதுமே பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கும் அந்த இடத்திற்கு கடந்து சென்றதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆம் ஐயா. மக்களை பரிதாபமாக ஆக்குவதற்கு போதுமான அளவு மதத்தை வைத்திருக்கிறார்கள். ''என்னால் அங்கு ஒரு பத்து நிமிடம் கூட உட்கார முடியாது. அம்மாடி, அந்த பிரசங்கி எவ்வளவு நேரம் பிரசங்கிக்கிறார்?“ என்கிறீர்கள். அது சரி, உங்களுடைய இரட்சிப்பு எவ்வளவு ஆழமானது? ஞாயிறு காலையில் நீங்கள் சென்று, ''நல்லது நான் அங்கு சென்று அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்பேன்“, என்கிறீர்கள். பிறகு ஒரு சிறு துளிமட்டும் பெற்றுக் கொண்டு திரும்பச் செல்வீர்கள். நீங்கள் அவ்வளவுதான் பெற்று கொள்கிறீர்கள்! 69சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லட்டும், மோசே அந்த கன்மலையை அடித்தபோது அது முழு வனாந்திரத்திற்கும் தண்ணீர் பாய்ச்சியது. ஆமென். ஆம் ஐயா. அவர்களுக்கு இருந்த தேவை அது மட்டுமே. அவர்களெல்லோரும் அப்படியே அங்கே கீழே விழுந்து குடித்தார்கள், குடித்தார்கள், குடித்தார்கள் அவர்கள் நிரம்பும் வரை குடித்தார்கள். அப்படியிருந்தும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஒரு நொடிக்கு நாற்பதாயிரம் கேலன். பத்து லட்சம், இருபது லட்சம் மக்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு குடிப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். அவர்கள் தாகத்தோடு வேறு இருந்தார்கள். அவர்களிடம் ஒட்டகங்களும் மிருகங்களும் கூட இருந்தது. வேதாகமம் சொல்கிறது, ''மிகுதியாய் வந்தது“ என்று. அது அப்படியே அந்த வனாந்திரம் முழுவதுமாய் கடந்து சென்றது. 70அதேவிதமாகதான் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியை அருளுகிறார். ஏதோ கொஞ்சமாக, ''நல்லது, நான் இப்பொழுது ஒரு சபையில் என்னை இணைத்துக் கொள்கிறேன்“ என்று சொல்லத் தக்கதாக அல்ல. ஓ, என்னே‚ ''ஓ என்னால் அந்த சத்தத்தை கேட்க முடியவில்லை, எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகிறது” என்கிறீர்கள். நீங்கள் மரித்து பரலோகத்திற்கு செல்வீர்கள் என்றால் அங்கே உறைந்தே போவீர்கள். ஏனென்றால் சகோதரனே அங்கே செல்லும்போது நீங்கள் பயங்கரமான சத்தத்தை கேட்க போகிறீர்கள். வேதாகமம் அங்கே அவர்கள் எல்லோரும் ''அல்லேலூயா“ என்று இரவும் பகலும் உரக்க கூறிக் கொண்டே இருக்கிறார்கள் என்று கூறுகிறது. எப்பொழுதும் பகல்தான், அங்கே இரவென்பதே கிடையாது. அது சரிதான். நீங்கள் மட்டும் பரலோகம் செல்வீர்கள் என்றால் அங்கு சென்ற இரண்டாவது நாளே மரித்து போவீர்கள். ஆம், ஐயா. ஏனென்றால் நீ இங்கே உன்னை சற்று கொஞ்சம் மட்டுமே ஈரமாக்கி கொண்டாய். நீ அந்த ஊற்றின் மையத்தில் உட்கார்ந்து, உன்னை முற்றிலுமாய் இழந்து, எங்கிருக்கிறாய் என்றுக் கூட அறியாத அளவிற்கு உன்னை ஏன் முழுவதுமாய் கழுவக்கூடாது. அந்த அளவிற்குதான் நாம் அதை பெற்றிட வேண்டும். 71''உடிக்கா பைக் என்னும் இடத்தில் இருக்கும் இந்த சிறிய குட்டை உண்டு. என்னால் அதில் நீந்த முடியும்“ என்று என்னுடைய மாமாவிடமும் மற்றும் என் அப்பாவிடமும் நான் சொல்வதுண்டு. ஒரு நாளில் என் தகப்பனார் அந்த பாலத்தின் மேலே உட்கார்ந்துக் கொண்டு என்னை பார்த்து, ''எங்கே, நீந்து பார்ப்போம்“ என்றார். அந்த குட்டை இந்த அளவிற்கு ஆழமாக இருந்தது. நானோ ஒரு சோப்பு பெட்டியின் மேலே நின்றுக் கொண்டிருந்தேன். என்னுடைய உடைகளை நான் கழற்றிவிட்டு என் மூக்கை நேராக வைத்து அந்த பெட்டியின் மேல் மேலும் கீழுமாக குதித்துக் கொண்டே உள்ளே குதித்தேன். அதில் குதித்தவுடன் சேறு எல்லா பக்கமும் தெரித்தது. அதோடு இல்லாமல் சேற்றை எல்லா பக்கமும் தெறித்துக் கொண்டே என் தந்தையிடம், ''அப்பா நான் எப்படி நீந்துகிறேன்“ என்று கேட்டேன். அவரோ, ''நீ உடனே வெளியே வா“ என்றார். அதுவா நீச்சல், நான் அதுவரைக்கும் சேற்றில் புரண்டுக் கொண்டிருந்தேன். அநேக சேற்றில் புரண்டு கொண்டு இருக்கும் சபை அங்கத்தினர்களையும் கூட நம்மிடத்தில் பெற்றிருக்கிறோம். அது சரிதான். அது சரிதான். சேற்றில் புரள்கிறவர்கள். ஆம் ஐயா‚ ஒரு நாளில் நானும் என் மாமாவும் ஓஹாயோ நதியில் படகில் சென்றுக் கொண்டிருந்தோம். அதில் கிட்டத்தட்ட இருபது அடி ஆழத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. நானோ அவரிடம் என்னுடைய நீச்சல் திறமையை பற்றி பெருமையாய் பேசிக் கொண்டிருக்க அவரோ தன் கையில் வைத்திருந்த துடுப்பை வைத்து என்னை தண்ணீரில் தள்ளிவிட்டு, ''எங்கே நீந்து பார்ப்போம்“ என்றார். ஆமென். அல்லேலூயா‚ நான் இப்பொழுது நீந்த வேண்டும் இல்லையென்றால் மூழ்க வேண்டும். ஓ, என்னே‚ 72தேவன் வனாந்திரத்திலே கன்மலையை திறந்து தண்ணீர் பீறிட்டு வரும்பொழுதே நீங்கள் அந்த நீரூற்றுக்கு சென்று அதில் நனைந்து பழகிக் கொள்ளுங்கள். ''அந்த கன்மலையோடு பேசு, அப்பொழுது அது தண்ணீரை கொண்டு வரும்“ என்றார். என் நண்பனே, ஒருவேளை இன்றிரவு நீ மரித்துக் கொண்டிருக்கலாம். நீ அந்த கன்மலையோடு பேச வேண்டும். அது சரியே. நீ ஒருவேளை எல்லா இடமும் சென்றிருக்கலாம். ஒருவேளை நீ ஒரு சபைக்கு சென்றிருக்கலாம், மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் சபையில் அங்கத்தினராக சேர்ந்திருக்கலாம். அங்கே அவர்கள் உன்னிடம் கோபப்பட்டவுடன் நீ பிரஸ்பிடேரியனுக்கு சென்றிருக்கலாம். பின்னர் அங்கிருந்து பெந்தெகொஸ்தேயினரிடமும் பின்னர் நசரேயர் மற்றும் பில்கிரிம் ஹோலினஸ் சபைக்கும் சென்றிருக்கலாம். ஆனபொழுதிலும் உனக்கு ஒரு புரிந்துக் கொள்ளுதல் கிடைக்காமல் இருக்கலாம். இன்றைக்கு நீ அந்த கன்மலையோடு பேசு. உனக்கும் அவருக்கும் பிரச்சனை ஏதேனும் இருக்கிறதா? ஆம். அவர், ''அந்த கன்மலையோடு பேசு, அப்பொழுது அவர் அவருடைய தண்ணீரை தருவார்“ என்று கூறினார். அது தன்னுடைய தண்ணீரை கொண்டு வரும். அவரை நீங்கள் இனிமேலும் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரிடம் பேசினால் மட்டும் போதும். ஒரு நண்பனை போல அவரிடம் பேசிடுங்கள். நீங்கள் மருத்துவரிடம் சென்றிருக்கலாம். சுகமடைவதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவையெல்லாவற்றையும் நீங்கள் செய்து பார்த்துவிட்டீர்கள். உங்கள் வல்லமைக்குட்பட்ட எல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்துவிட்ட பின்னரும் உங்களால் சுகமடைய முடியவில்லை. உங்களுக்கு தெரிந்த எல்லா மருத்துவரின் அலுவலகத்திற்கும் நீங்கள் சென்றபோதும் அவர்கள் உங்களிடம், ''எங்களால் உங்களுக்கு ஒன்றையும் செய்யமுடியாது“ என்று கூறிவிட்டார்கள். இன்றிரவு நீங்கள் ஏன் அந்த கன்மலையிடம் பேசக் கூடாது? அவரிடம் ஜீவ தண்ணீர் இருக்கிறது. அவர் ஜீவனை அதிகதிகமாக தருகிறார். 73வேதாகமத்தில் ஒருமுறை ஆகார் என்ற ஸ்திரீ இருந்தாள். நான் அவளை இப்பொழுது நினைத்து பார்க்கிறேன். நேரத்தின் காரணமாக நான் இப்பொழுது முடிக்க போகிறேன். ஆகார் என்ற பெயர் கொண்ட ஒரு ஸ்திரீ இருந்தாள், அவளுக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது. அவளோ வனாந்திரத்திற்கு கொஞ்சம் தண்ணீரோடு அனுப்பப்பட்டாள். அந்த சிறுக் குழந்தைக்கு நாள் முழுவதும் ஊட்டிக் கொண்டே வந்தாள். ஆனால் மத்தியான வேளைக்குள்ளாக தண்ணீர் தீர்ந்துவிட்டது. அந்த குழந்தை வீறிட்டு அழ துவங்கியது. அவனுடைய சிறு உதடுகள் வெடித்து நாக்கு வீங்க ஆரம்பித்தது. அந்த பரிதாபமான தாயால் என்னதான் செய்ய முடியும்? அவளால் முடிந்த அளவிற்கு தண்ணீருக்காக தேடி அலைந்தாள் ஆனால் அவளுக்கு தண்ணீர் கிடைக்கவே இல்லை. அவளால் அந்த குழந்தை மரிப்பதை பார்க்க முடியவில்லை. ஆகையால் அதை ஒரு புதருக்கு கீழாக படுக்க வைத்து விட்டு கொஞ்ச தூரம்தள்ளி போய்விட்டாள். அவள் முழங்காற்படியிட்டு அந்த கன்மலையோடு பேசினாள். அவள் அந்த கனன்மலையோடு பேசினவுனே தேவனுடைய தூதனானவர் அவளிடம் திரும்ப பேசினார், ''ஆகார் அங்கே என்ன பீறிட்டுக் கொண்டு வருகிறது பார்“ என்றார். அங்கே ஒரு கிணறு நிறைய தண்ணீர் இருந்தது. அது இன்றைக்கும் உபயோகத்தில் இருக்கிறது. கிட்டதட்ட நான்காயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் அது உபயோகத்தில் இருக்கிறது. ஆகார் கண்ட அந்த ஊற்று அது இன்றைக்கும் உபயோகத்தில் இருக்கிறது. அவள் அந்த கன்மலையிடம் பேசினால், அந்த கன்மலை தண்ணீர் கொண்டு வந்தது. 74எபிரேய பிள்ளைகள் சிலர் இருந்தனர், அவர்கள் ஒருநாள் அக்கினி சூளைக்குள் சென்றார்கள். அப்பொழுது அவர்கள் அந்த கன்மலையிடம் பேசினார்கள். அந்த கன்மலையும் அவர்களோடே இருந்தது. ஒரு சமயத்தில் சமாரியாவிலிருந்து ஒரு ஸ்திரீ வெளியே வந்தாள். அவள் அதைரியப்பட்டிருந்தாள். அவள் பாவத்தில் இருந்தாள் மற்றும் பல காரியங்கள் அவளுடைய ஜீவியத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அதினிமித்தம் அவள் மிகவும் அதைரியப்பட்டிருந்தபடியால் அந்த யாக்கோபின் கிணற்றண்டைக்கு சென்று, ஆறுதலடைந்து, மீண்டும் திரும்பி செல்வாள். அவள் யாக்கோபின் கிணற்றண்டைக்கு சென்று மீண்டுமாக திரும்ப செல்வாள். ஒரு நாள் அப்படியாய் அவள் தன்னுடைய தண்ணீர் குடத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு மிகவும் அதைரியப்பட்டவளாய் நின்றுக் கொண்டிருந்தாள். அங்கேதானே அந்த கன்மலை அவள் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தார். அவள் அந்த கன்மலையிடத்தில் பேசினபோது அவர் அவளுடைய ஆத்துமாவிலே பீறிட்டு அடிக்கும் ஊற்றை தந்தார். அவள் அப்படியே அந்த பட்டணத்திற்குள்ளாய் ஓடிச்சென்றப் பின் ஒருபோதும் தண்ணீர் எடுக்க திரும்ப வரவில்லை. அவளிடம் ஜீவன் இருந்தபடியால் மற்றவர்களிடம், ''வாருங்கள், ஒரு மனிதன் நான் செய்த எல்லாவற்றையும் எனக்கு சொன்னார். அவர் கிறிஸ்துதானா என்று வந்து பாருங்கள்“ என்றாள். அவள் அந்த கன்மலையிடத்தில் பேசினாள், அந்த கன்மலை அதன் தண்ணீரை கொண்டு வந்தது. ஒரு சிறிய ஸ்திரீ இருந்தாள். அவள் தன்னுடைய பணத்தை எல்லாம் மருத்துவர்களிடத்திலும் போலியான மருத்துவர்களிடத்திலும் கொடுத்து வீணாக்கினாள். அப்படியிருந்தும் அவளுடைய உதிர போக்கு சரிஆகவில்லை. அவள் ஒரு வேளை அவளுடைய வயல்வெளிகளையெல்லாம் அடமானம் வைத்திருக்கலாம், அதை விற்றும் இருக்கலாம். ஒருநாள் அவள் அமர்ந்து பின்னிக் கொண்டிருக்கும் போது அந்த சாலையில் ஏதோ சத்தம் வருவதை கேட்டாள். அவள் அந்த கன்மலையிடத்தில் பேசினாள். அந்த கன்மலையும் திரும்பி பார்த்து, ''என்னை யார் தொட்டது“ என்று கேட்டது. அவள் அந்த கன்மலையிடத்தில் பேசினவுடனே எல்லாம் தீர்ந்தது. அவர் அவளுக்கு ஜீவ ஊற்றை அளித்தவுடன் அந்த உதிரப்போக்கு நின்றது. அது உடனடியாக முற்றிலும் சுகமானது. 75ஒரு நாள் ஒரு குருட்டு பிச்சைக்காரன் சுவற்றின் மீது சாய்ந்தவாறு குளிரில் நடுங்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்த எல்லாமே தீர்ந்து போயிற்று. இதோ அவன் இங்கு பரிதாபமான நிலையில் இருக்க, மக்கள் அவனை கடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அவன் ஏதோ வருவதை கேட்டு, ''அது என்னது?“ என்று கேட்டான். அதன்பிறகு அவன் அந்த கன்மலையிடத்தில் பேசினான். ஆனால் சபை அங்கத்தினர்களோ அவனை, ''அதெல்லாம் ஒன்றும் அவசியமில்லை, அது உனக்கு கிடைக்காது. ஆகையால் நீ ஒதுங்கி போ. சத்தம் போடாதே“ என்று கூறி அவனை தடுக்க முயன்றனர். ஆனால் அவன் இன்னும் உரக்க சத்தமாய், ''தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மீது இரக்கமாயிரும்“ என்று கத்தினான். அவன் அந்த கன்மலையிடத்தில் பேசினான், அந்த கன்மலையும் அவனுக்கு அந்த பொங்கிடும் ஊற்றை அளித்தது. அவன் கண்கள் திறக்கப்பட்டது. அன்றைக்கு வனாந்திரத்தில் இருந்த அதே கன்மலை இன்றைக்கும் இங்கிருக்கிறது. அது மக்களை களிகூற செய்கிறது. 76ஒருநாள் எருசலேம் முழுவதும் நின்று ஒரு தெய்வீக சுகமளிப்பவரை, ஒரு பரிசுத்த உருளையை, அந்த நகருக்குள் நுழைவதை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் நின்றுக் கொண்டிருந்தசிலர், “ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினால் வருபவருக்கு ஓசன்னா!” என்று கத்தினார்கள். அங்கேதானே தங்களை தாங்களே சபை அங்கத்தினர் என்று அழைத்துக் கொண்டு, நீண்ட அங்கிகளை அணிந்து, டி.டி போன்ற பட்டப்படிப்புகளை பெற்றிருந்தவர்கள், “அவர்களை அமைதியாய் இருக்கச் சொல்லுங்கள். அது எங்களுக்கு பயத்தை உண்டாக்குகிறது. அவர்களை அமைதியாயிருக்க சொல்லுங்கள்” என்றனர். ஆனால் அதற்கு அவரோ, ''இவர்கள் பேசாமலிருந்தால் இந்தக் கற்கள் உடனடியாக கூச்சலிடும்“ என்றார். எதனால் அப்படி? ஏனென்றால் கைகளால் மலைகளிலிருந்து பெயர்க்கப்படாத அந்த கன்மலை எருசலேமிற்குள் உருண்டு வருகிறது. அதிலிருந்து சிறு சிறு கற்கள் எல்லாம் குடித்துக் கொண்டிருந்தன. ''அந்த கன்மலையிடம் பேசு, அதன் தண்ணீரை அது கொண்டுவரும்.” 77இந்த இரவுப்பொழுதில் உங்களுக்கு இரட்சிப்பு தேவையாக இருக்குமானால் கன்மலையிடத்தில் பேசுங்கள். அது அதன் தண்ணீரைக் கொண்டுவரும். நீங்கள் பின்னடைந்தவராக இருந்தாலும் சரி, அந்த கன்மலையிடம் பேசுங்கள். அது அதன் தண்ணீரை கொண்டு வரும். நீங்கள் பட்டணத்தில் இருக்கும் எல்லா சபைக்குச் சென்றும் கிறிஸ்துவை பெறாதவராய் இரட்சிப்படையாமல் இன்றிரவு இங்கே வந்து உட்கார்ந்திருக்கலாம். இப்பொழுதே அந்த கன்மலையோடு பேசு, அது தன் தண்ணீரை கொண்டு வரும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் தேவனிடமிருந்து விலகிச்சென்று, பின்மாற்றமடைந்த ஜீவியம் ஜீவித்துக் கொண்டிருந்தாலும், மற்றுமொரு வாய்ப்பே உங்களுக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அந்த கன்மலையோடு சற்று பேசுங்கள், அது தன் தண்ணீரை கொண்டுவரும். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா?(சபையார் ''ஆமென்“ என்கின்றனர்) தேவன் அதை அருளுவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அதை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அல்லேலூயா‚ அவர் இன்றிரவு இங்கிருக்கிறார். ஒருவேளை நீங்கள் வியாதிப்பட்டு உலகத்தில் உள்ள எல்லா வழிகளையும் முயற்சித்திருக்கலாம், ஜெப வரிசையில் நிற்க முயற்சி செய்து ஜெப அட்டை இருந்தும் அதில் நிற்க முடியாமல் போயிருக்கலாம், நீங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றிருக்கலாம், மீண்டும் மற்றொரு கூட்டத்திற்கும் சென்றிருக்கலாம், மேய்ப்பரால் அபிஷேகம் பெற்றிருக்கலாம், இந்த ஜெப வரிசையில் நின்றிருக்கலாம், மற்றும் எல்லா இடத்திற்கு சென்றிருப்பினும் உங்களால் குணம் அடையவே முடியாமல் இருக்கலாம். அன்றியும் நீங்கள் ஏன் அந்த கன்மலையிடத்தில் பேசக்கூடாது? அவர் அவருடைய தண்ணீரை கொண்டு வரப்பண்ணுவார். அது சரிதான். நீங்கள் ஏன் அவரை ஒரு முறை முயற்சி செய்து பார்க்க கூடாது? அவர் இந்த கட்டிடத்தில் இருக்கும்போதே அவருடன் பேச ஆரம்பியுங்கள். இப்பொழுதே இங்கேயே உங்களை குணமடைய செய்வதற்காகவே அவருடைய பிரசன்னம் இங்கிருக்கிறது. அதை நான் விசுவாசிக்கிறேன். அதை என்னுடைய முழு இருதயத்தோடு நான் அறிந்திருக்கிறேன். அதை நான் நம்புகிறேன். சில காரியங்களை பற்றி நான் அறியேன் ஆனாலும் சில காரியங்களை பற்றி நான் அறிந்திருக்கிறேன். அந்தப்படி நான் ஜீவிக்கிற தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இப்பொழுது இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன். 78நான் இப்பொழுது பலிப்பீட அழைப்பை செய்ய முயற்சிக்கும் வேளையிலேயே, என்னுடைய இருதயத்தில், தரிசனங்கள் இந்த கட்டிடம் முழுவதும் வெடிக்கிறது. ஓ, அது உண்மைதான். தேவனுடைய வல்லமை நிச்சயமாகவே இப்பொழுது இங்கிருக்கிறது. அவர் இங்கே அசைவாடுகிறதை என்னால் காணமுடிகிறது. வியாதியாயிருக்கிறவர்களின் ஜெபம் என்னை ஒரு பரிமானத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. அன்றைக்கு அவர்களின் இருதயத்தை பகுத்தறிந்த அதே கன்மலை இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை நிரூபிக்க உங்களோடு இன்றிரவு பேசுவதற்காக இங்கிருக்கிறார். அந்த உதிரப்போக்கும் மற்ற வியாதிகளையும் கொண்டிருந்த அந்த ஸ்திரீயை பார்த்தவர் இப்பொழுது இங்கிருக்கிறார். நீங்கள் மட்டும் அவரோடு பேசுவீர்களென்றால் அவர் அவருடைய தண்ணீரை கொண்டு வருவார். அதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் சரியாக நடுவில் உட்கார்ந்திருக்கும் ஸ்திரீயே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்பொழுது உங்களிடம் ஜெப அட்டை இல்லை, இல்லையா? ஏதோ வெள்ளையாக கழுத்தில் அணிந்து அங்கு உட்கார்ந்ததிருக்கும் ஸ்திரீயே, உங்களுக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது இல்லையா? உங்களிடம் ஜெப அட்டையும் இல்லை, இல்லையா? உங்களுக்கு எந்த ஜெப அட்டையும் தேவையில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களால் அந்த கன்மலையோடு பேச முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் நீரிழிவு நோயை குறித்து அவரிடம் இப்பொழுது பேச விரும்புகிறீர்களா?அப்படியென்றால் எழும்பி நில்லுங்கள். நான் சொன்னது சரிதானே? ''நான்இயேசு கிறிஸ்துவை என் பரிகாரியாக ஏற்றுக் கொள்கிறேன்“ என்று சொல்லுங்கள். அப்பொழுது தேவன் உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று சுகமாக்குவார். அந்த கன்மலையோடு பேசுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, சுகத்தோடே கடந்து செல்லுங்கள். 79அவர்களுக்கு அருகிலே உட்கார்ந்திருக்கும் ஸ்திரீயே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு சுருள் சிறை நாளங்கள் (varicose veins) பிரச்சனை இருக்கிறது அல்லவா? அது சரிதான். எழும்பி நில்லுங்கள். உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் உங்கள் கணவர்தானே? சரியா? உங்களுக்கும் நீரிழிவுநோய் இருக்கிறது அல்லவா? அது சரிதானே? நீங்கள் உங்கள் மனைவி மீது உங்கள் கரத்தை வையுங்கள். சரி. நீங்கள் இருவரும் இல்லினாய் என்ற பட்டணத்திலிருந்து வருகிறீர்கள். அது சரிதானே? இப்பொழுது நீங்கள் அந்த கன்மலையோடே பேசினவாறு இல்லினாய்க்கு திரும்பி செல்லுங்கள். அது உங்களை விட்டு அகன்று போகும், திரும்பி ஒருக்காலும் வராது. அல்லேலூயா‚ வனாந்திரத்தில் அடிக்கப்பட்ட காலத்தினூடாய் கடந்து வந்த அந்த கன்மலை இப்பொழுது இங்கு இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். அது சரியே. இதோ தொப்பியில் பூக்களை கொண்டிருக்கும் சிறிய சீமாட்டியே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அங்கே உட்கார்ந்துக் கொண்டு கீழ்வாதத்திலிருந்து விடுப்பட முயற்சிக்கிறீர்கள். இதோ முகத்தை திருப்பி வேறுபக்கமாக பார்த்தவரே, கர்த்தர் உங்களை குணமாக்குவார் என்பதை முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படியென்றால் எழும்பி நின்று உங்கள் கால்களை உயர்த்தி தரையை மிதித்து, ''கீழ்வாதம் போய்விட்டது“ என்று கூறுங்கள். அந்த கன்மலையோடு பேசுங்கள் அவர் அதை கொண்டு வருவார்… நான் உங்களுக்கு சொல்லட்டும், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவறாயிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பிரத்தியட்சப்படுத்த இங்கு வந்திருக்கிறார். 80இதோ பெண்களுக்கான பிரச்சனையோடு அமர்ந்திருந்து, ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறும் பச்சைநிற ஜாக்கெட் அணிந்திருக்கும் ஸ்திரீயே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவன் உங்களை சுகமாக்கினார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒரு நிமிடம் எழும்பி நில்லுங்கள். நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு பெண்களுக்கான பிரச்சனை இருக்கிறது. அது ஒரு கட்டி. அதிலிருந்து ஒருவிதமான கசிவு ஏற்படுகிறது. சரியா? அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். என்னை அவ்வாறு கூறச் செய்வது என்னது? அது அந்த கன்மலை உங்களுக்கு பிரதியுத்திரம் அருளுவது. நீங்கள் அவருக்கு பிரதியுத்திரம் கூறி சுகமாகிடுங்கள். அல்லேலூயா‚ ஓ, அவர் தன்னுடைய வல்லமையை பிரத்தியட்சப்படுத்த விரும்புகிறார். இதோ நான் தேவனுடைய தூதனானவரை காண்கிறேன். அந்த வனாந்திரத்திலே பிள்ளைகளை பின்தொடர்ந்த அதே அக்கினி ஸ்தம்பமானவர் இப்பொழுது இந்த கட்டிடத்தில் அசைவாடுகிறார். 81நான் ஒரு ஸ்திரீயை காண முயற்சிக்கிறேன். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் எங்கே? இதோ அவர் நிற்கிறார். ஆம், அங்கு நின்றுக் கொண்டிருக்கும் அந்த சிறிய ஸ்திரீ, அந்த இரண்டாவது நபர் உட்கார்ந்திருக்கிறார். அந்த நின்றுக் கொண்டிருக்கும் ஸ்திரீ ஒரு ஆணைக் குறித்து, உங்கள் குடிகார கணவரைக் குறித்து நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்திரீயே அது சரிதானே? அது உண்மையென்றால் எழும்பி நில்லுங்கள். நீங்கள் உங்கள் குடிகார கணவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? அது உண்மையென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அந்த கன்மலையோடு பேசுங்கள், தேவன் அவரை அந்த காரியத்திலிருந்து விடுவித்து கொண்டு வருவார். 82நீங்கள் மட்டும் அதை செய்வீர்கள் என்றால் தேவன் இங்கு என்ன காரியம் வேண்டுமானாலும் செய்வார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரோடு உரையாடுவீர்களா? அப்படியென்றால், இப்பொழுதே எழும்பி நின்று அந்த கன்மலையோடு பேசுங்கள். அப்பொழுது அந்த கன்மலையானது அதன் தண்ணீரை கொண்டுவரும். நீங்கள் நிற்பீர்களா? யாருக்கெல்லாம் அவரிடமிருந்து இரட்சிப்பு வேண்டும்? அப்படியென்றால் உங்கள் கரத்தை உயர்த்தி, ''அவர் என்னுடைய இருதயத்தில் வர வேண்டும்“ என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களையும், உங்களையும் மற்றும் உங்களையும். ஓ, என்னே! ஆம் ஐயா. இதோ சகோதரனே, அந்த கேன்ஸர் உங்களை விட்டு ஓடிப் போய்விட்டது. நீங்கள் இப்பொழுது சுகத்தோடு வீட்டிற்கு செல்லலாம். அல்லேலூயா! அது உண்மை. யாருக்கெல்லாம் சுகம் வேண்டுமோ நீங்களெல்லோரும் கரத்தை உயர்த்தி, “தேவனே, நான் உம்மோடு பேசுகிறேன். நான் உம்மோடு பேசுகிறேன்” என்று கூறுங்கள். அது சரி. இதோ அது வெளியே போகிறது. திருவாளரே அந்த சைனஸ் தொல்லை உம்மை விட்டு வெளியேறுகிறது. நீங்கள் இப்பொழுது விடுதலையானீர்கள். வீட்டிற்கு செல்லுங்கள், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நீங்கள் சுகமானீர்கள். 83இங்கிருக்கும் யாருக்காவது இப்பொழுது அவரை கண்டுக் கொள்ள வேண்டுமென்றால் உங்கள் கரத்தை உயர்த்தி, “தேவனே, என்னை சுகமாக்கினதற்காக நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்னை சுகமாக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள். ஓ‚ இரக்கத்தின் தேவனே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு உம்முடைய வல்லமையை இன்றிரவு அனுப்பும். இந்த கட்டிடத்தில் இருக்கும் மக்கள் மேல் நீர் அசைவாடுவீராக. மற்றும் பரிசுத்த ஆவியானவர் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தட்டும். இந்த இரவில் ஒருவராகிலும் சுகமடையாமலோ முடமாகவோ இந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஒவ்வொருத்தரையும் சுகமாக்குவீராக.